"ஜனநாயக நாட்டின் தலைவர் மோடி குற்றவாளியை கட்டிப்பிடிப்பது ஏமாற்றமளிக்கிறது!" – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர் குற்றவாளியை கட்டி அணைப்பது ஏமாற்றம் அளிப்பதாக உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்தியா, ரஷ்யா இடையே இதுவரை 21 வருடாந்திர உச்சி மாநாடுகள் நடைபெற்றுள்ளன. இரு நாடுகளிலும் ஒன்றுவிட்டு ஒன்றாக இந்த மாநாடுகள் நடத்தப்படுகின்றன. கடைசியாக, கடந்த 2021 ஆம் ஆண்டு டெல்லியில் இந்திய-ரஷ்யா உச்சி மாநாடு நடைபெற்றது. ரஷ்ய அதிபர் விளாதிமீா் புதின் இந்தியாவுக்கு வந்திருந்தார். அதன்பின் உச்சி மாநாடு நடைபெறவில்லை.
இந்த சூழலில் இந்தியா – ரஷ்யா இடையிலான 22-ஆவது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, ரஷ்ய அதிபா் விளாதிமீர் புதின் விடுத்த அழைப்பின்பேரில் இரண்டு நாட்கள் பயணமாக பிரதமா் மோடி நேற்று (ஜுலை 8) ரஷ்யா சென்றடைந்தார். மாஸ்கோ விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கு பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசினார். இருவரும் தங்களது பரஸ்பர நட்பினை வெளிப்படுத்தினர். அப்போது ஒருவரை ஒருவர் கட்டியணைத்துக் கொண்டனர். இந்த புகைப்படங்கள் வலைதளங்களில் வெளியானது. இதற்கிடையே, நேற்று உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 37 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர், குற்றவாளியை கட்டி அணைப்பது ஏமாற்றம் அளிப்பதாக உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர், உலகில் கொடுங்கோன்மை செயல்களை செய்யும் குற்றவாளியை மாஸ்கோவில் கட்டி அணைப்பதை பார்க்கும் போது அமைதி முயற்சிகளுக்கு பெரும் ஏமாற்றம் தருவதாக அமைந்துள்ளது” என ஜெலன்ஸ்கி பதிவிட்டுள்ளார்.