“கவுதம் கம்பீரை சில கடமைகளில் இருந்து விலக்கி வைப்பது புத்திசாலித்தனம்” - #BCCI -க்கு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கோரிக்கை!
பத்திரிகையாளர் சந்திப்பில் பேசவும், கேள்விகள் கேட்கவும் கவுதம் கம்பீருக்கு தெரியவில்லை என இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு புறப்படுவதற்கு முன்னதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சொந்த காரணங்களுக்காக பெர்த்தில் நடக்கும் தொடக்கப் போட்டியை கேப்டன் ரோகித் தவற விட்டால், இந்திய அணியை வழிநடத்தப்போவது யார்? தொடக்க வீரராக களமாட போவது யார்? போன்ற கேள்விகளுக்கு பதிலளித்தார். மேலும், அவரையும் அவரது தலைமையிலான இந்திய அணியையும் விமர்சிப்பவர்களையும் தனது வழக்கமான பாணியில் பதிலடி கொடுத்தார்.
இது தொடர்பாக விமர்சனம் செய்துள்ள இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், “ஊடகவியலாளர்களிடம் கேள்விகளை கேட்கவும், பத்திரிகையாளர் சந்திப்பில் பேசவும் கவுதம் கம்பீருக்கு தெரியவில்லை. அதனால் பிசிசிஐ கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தலைமை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோரை மட்டுமே செய்தியாளர்களிடம் பேச அனுமதிக்க வேண்டும். கம்பீரை அனுப்பக்கூடாது என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) வலைதள பக்கத்தில், "செய்தியாளர் சந்திப்பில் கம்பீர் பேசுவதைப் பார்த்தேன். அவரை இதுபோன்ற கடமைகளில் இருந்து விலக்கி வைப்பது தான் பிசிசிஐக்கு நல்லது. அதுதான் புத்திசாலித்தனம். அவர் திரைக்குப் பின்னால் இருந்து மட்டும் வேலை செய்யட்டும். அவர்களுடன் உரையாடும் போது அவரிடம் சரியான நடத்தையோ அல்லது வார்த்தைகளோ இல்லை. ரோகித் மற்றும் அகர்கர், மீடியாவை எதிர்கொள்வதில் திறமையானவர்கள்" என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பதிவிட்டுள்ளார்.
சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் படுதோல்வியை சந்தித்தது. 2012-ம் ஆண்டுக்குப் பிறகு, 18 தொடர்களில் தோல்வியடையாமல் ரன் குவித்த இந்தியாவின் முதல் தொடர் தோல்வி இதுவாகும். இதனால், இந்திய அணியையும், பயிற்சியாளர் கவுதம் கம்பீரையும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.