“உண்மையில் வைரமுத்துவை வளர்த்தது இளையராஜா தான்” - இயக்குநர் சீனு ராமசாமி பதிவு!
இசையமைப்பாளர் இளையராஜவை புகழ்வது போல வஞ்சித்து இயக்குநர் சீனு ராமசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பதிவிற்கு பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர்கள் பிரஜன், யாஷிகா ஆனந்த் நடித்துள்ள “படிக்காத பக்கங்கள்”
படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஏப்.27 ஆம் தேதி சென்னை வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்றது. இவ்விழாவில் கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.
அப்போது பேசிய அவர், இசை பெரியதா? பாடல் வரிகள் பெரியதா? என்கிற பிரச்னை தற்போது சினிமாவில் எழுந்துள்ளது. இசையும், பாடல் வரிகளும் இணைந்திருந்தால்தான் நல்ல பாடல் உருவாகும். ஒருவரை பெயரை வைத்து தான் பிரேமா என்றோ சங்கர் என்றோ அழைக்கிறோம். பெயரே இல்லை என்றால் எப்படி அழைப்போம். வெறும் இசை மட்டுமே இருந்திருந்தால் அந்த பாடலை அடையாளம் காண முடியுமோ?
பாட்டுக்கு பெயர் வைத்தது மொழி. அதற்கு அழகு செய்தது இசை. நல்ல பொருளாக இருந்தால் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் தங்கம் தங்கம் தான். வைரம் வைரம் தான். நல்ல பொருள் எத்தனை காலம் ஆனாலும் தன் தடைகளை கிழித்துக்கொண்டு வெளிவந்துவிடும். கதை நன்றாக இருந்தால் நிச்சயம் அந்த படம் வெற்றி பெறும். சில நேரங்களில் இசையை விட மொழி பெரியதாகவும், மொழியை விட இசை பெரியதாகவும் திகழும் சந்தர்ப்பங்கள் உண்டு. அதனை புரிந்து கொள்பவன் ஞானி, புரியாதவன் அஞ்ஞானி” என பேசியிருந்தார்.
இவரின் இந்த பேச்சு இளையராஜாவை தாக்கி பேசுவது போல இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது. இதனையடுத்து, “இளையராஜாவை பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு” என இளையராஜாவின் தம்பியும், இயக்குநரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் வைரமுத்துவிற்கு எதிராக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். கங்கை அமரனின் இந்த பேச்சிற்கு கவிஞர் வைரமுத்து எந்த பதிலும் அளிக்கவில்லை.
இந்நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;
“உண்மையில் வைரமுத்து அவர்களை வளர்த்தது இளையராஜா அவர்கள்தான். வைரமுத்து அவர்கள் மீதான கோபத்தில் யாரையும் கவித்துவமாக எழுத விடாமல் 20 வருடம் தான் போட்ட நல்ல டியுன்களுக்கு நிறைய Dummy lyrics ஓகே பண்ணி அய்யா வைரமுத்துவை மேலும் ஜொலிக்க விட்டவர் இளையராஜா அவர்கள்” என கங்கை அமரனை டேக் செய்துள்ளார்.
இவரின் இந்த பதிவிற்கு பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் வாலி போன்றவர்களின் பாடல் வரிகள் என்ன டம்மியா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.