"கலைஞர் நாணயத்தை பாதுகாப்பு அமைச்சர் வெளியிடுவது மிகவும் பொருத்தமானது" - முதலமைச்சர் #MKStalin பேச்சு!
பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாணயத்தை வெளியிட்டது மிக மிக பொருத்தமானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக சாா்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா, பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் சிறப்பாகக் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நிலையில், கலைஞர் நூற்றாண்டையொட்டி மத்திய அரசு சாா்பில் அவரின் உருவம் பொறித்த ரூ.100 நாணயத்தை இன்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டது.
இதன் பின்னர் கலைஞர் நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழா சென்னை கலைவாணா் அரங்கில் இன்று மாலை மணியளவில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் முன்னிலை வகித்தார்.
இந்த விழா மேடையில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது..
” எனது உணர்வுகளை எப்படி விவரிப்பது என்பது குறித்து சொல்ல முடியாத மகிழ்ச்சியில் நான் இங்கே நின்று கொண்டிருக்கிறேன். நா நயம் மிக்க தலைவருக்கு நாணயம் வெளியிட்டது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. இதனை இந்தியாவே கொண்டாடி வருகிறது. இது போன்ற எத்தனையோ சிறப்புகளுக்கும் தகுதியானவர்தான் கலைஞர் கருணாநிதி.
பாதுகாப்பு துறை அமைச்சர் நாணயத்தை வெளியிட்டது மிக மிக பொருத்தமானது. நாம் கடந்த ஓராண்டாக பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளோம், மகளிர் உரிமைத்தொகை, மதுரை கலைஞர் நூலகம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். ஆனால் அவர் உருவாக்கிய கட்டமைப்புகளை பட்டியலிட்டு சொன்னால் ஒருநாள் போதாது.
கடந்த 15ம் தேதி நாட்டில் உள்ள அனைத்து முதலமைச்சர்களும் கொடி ஏற்றினார்கள், அதற்குக் காரணம் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிதான். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்கு பெயரும் நாணயம் தான், சொன்ன வாக்கை செயல்படுத்தி காட்டியது கலைஞரின் நாணயம் தான். இது எனது அரசு அல்ல நமது அரசு. ஒரு கட்சியின் அரசல்ல ஒரு இனத்தின் அரசு. நாணயத்தில் தமிழ் வெல்லும் என்ற சொல்லும் இடம் பெற்றிருக்கிறது என்றால் அது கலைஞரின் சாதனைதான்.” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.