நாதகவில் இருந்து வெளியேறிய 3000 பேர் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்!
நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீபகாலமாக கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து விலகி வருகின்றனர். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கொள்கைகளில் இருந்து விலகி முன்னுக்குப்பின் முரணாக பேசி வருவதாக கட்சியில் இருந்து விலகியவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், சீமான் மீது அதிருப்தி தெரிவித்து கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர். தனது கொள்கைகளில் இருந்து விலகி முன்னுக்குப்பின் முரணாக சீமான் பேசி வருவதே இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கின்றனர். மேலும் கட்சி கூட்டங்களுக்கு வருவதில்லை, தன்னிச்சை முடிவு என பல்வேறு குற்றச்சாட்டுகளையும் சீமான்மீது முன் வைக்கின்றனர்.
கட்சியில் இருந்து விலகுபவர்கள் மாற்று கட்சிகளில் சேர்ந்து வருகின்றனர். அதில் பெரும்பாலானோர் திமுகவிலேயே இணைந்து வருகின்றனர். இந்நிலையில், நாதகவில் இருந்து விலகியவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு நாளைய தினம் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாளைய தினம் நடக்கும் நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 38 மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் என 3000 பேர் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.