“காவல்துறையினர் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று அரசியல் செய்வது வேதனையாக உள்ளது” - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து!
மதுரை பழைய விளாங்குடி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி கே.ஆர்.சித்தன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில்,
“நான் அதிமுக பகுதி கழக செயலாளர். எனது மனைவி மாமன்ற உறுப்பினராகவும் உள்ளார். மாநகராட்சி 1-வது வார்டில் அதிமுக சார்பில் விளாங்குடியில் மதுரை-திண்டுக்கல் சாலையில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை சில நாட்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திறந்து வைத்தார். இதற்கு கூடல் புதூர் காவல் நிலைய போலீஸார் அனுமதி மறுத்து, அந்த நீர்மோர் பந்தலில் ‘நோட்டீஸ்’ ஓட்டினர்.
மதுரை மாநகராட்சி சார்பில் அனுமதி மறுத்து காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இது உள் நோக்கம் கொண்டது. எவ்வித இடையூறு இல்லாமல் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. எனவே மதுரை, விளாங்குடியில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்க மனுதாரருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் தண்டபாணி மற்றும் நீதிபதி சக்திவேல் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “தற்போது கடுமையான வெயில் காலம். மக்களின் நலன் கருதி ஒரு கட்சி நீர் மோர் பந்தல் அமைப்பதில் காவல்துறைக்கும், மதுரை மாநகராட்சிக்கும் என்ன பிரச்னை?. எதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி மறுக்கப்பட்டது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும் நீர் மோர் பந்தல் அமைக்க காவல்துறை விதித்துள்ள விதிகளை பார்த்து அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள், இரண்டு தண்ணீர் பானை வைக்கும் அளவுக்கு மட்டுமே பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவு போட்டது யார்?. அந்த காவல்துறை அதிகாரி படித்தவரா?. எவ்வாறு இரண்டு பானைகள் வைக்கும் அளவுக்கு பந்தல் அமைக்க முடியும் இது ஏற்கத்தக்கது அல்ல.
காவல்துறை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று அரசியல் பார்க்காமல் தங்கள் கடமையை செய்ய வேண்டும். இந்த நிகழ்வை பார்க்கும் போது வேதனையாக உள்ளது. தற்போது வெயில் காலத்தில் அனைத்து கட்சியும் நீர் மோர் பந்தல் அமைத்துள்ளது. ஆனால் இந்த கட்சிக்கு மட்டும் அனுமதி வழங்க மறுத்தது ஏற்க முடியாது.
எனவே அதிமுக தரப்பில் நீர் மோர் பந்தல் அமைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து, எவ்வித நிபந்தனையும் விதிக்காமல் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.