“மோதலில் தலையிடுவது எங்கள் வேலை அல்ல” - அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கருத்து!
இந்தியாவின் எல்லையோர பகுதிகளில் நேற்றிரவு பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதனால் ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிளாக் அவுட் செய்யப்பட்டது. பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை இந்திய ராணுவம் சமாளித்து வந்த அதே வேளையில், பாகிஸ்தானின் லாகூர், கராச்சி, சியால்கோட் கோட்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தாக்குதலை தொடங்கியது. இரவு முழுவதும் நீடித்த இந்த தாக்குதல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை.
இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் தாக்குதல் குறித்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “போர் பதற்றத்தை தவிர்க்க வேண்டும் என நம்மால் அவர்களிடம் சொல்ல மட்டும்தான் முடியும். இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான மோதலில் நாம் தலையிட போவதில்லை. அது எங்கள் வேலை அல்ல. இரு நாடுகளும் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என அமெரிக்கா சொல்ல முடியாது.
இந்த மோதல் பிராந்திய ரீதியிலான போராகவோ அல்லது அணு ஆயுத மோதலாகவோ மாறக்கூடாது என்பதுதான் எங்கள் எதிர்பார்ப்பு. அப்படி நடந்தால் பேரழிவு ஏற்படும். இது அந்த நாடுகளின் தலைவர்கள் கையில்தான் உள்ளது”
இவ்வாறு அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.