“கவனிக்காமல்விட்டது வேதனையைத் தருகிறது” - மகள் நினைவுநாளில் இளையராஜா உருக்கம்!
பாடகரும் இசையமைப்பாளருமான இளையராஜாவின் மகள் பவதாரிணி. புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்ட இவர் இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்தாண்டு இதே (ஜன.25) நாளில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் கடையாக ‘புயலில் ஒரு தோணி’ என்ற படத்திற்கு இசையமைத்திருந்தார்.
விஜயின் ‘தி கோட்’ படத்தில் இடம்பெற்ற ‘சின்ன சின்ன கண்கள்’ என்ற தலைப்பில் வெளியான பாடலுக்கு இவரின் குரலை ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் யுவன் சங்கர் ராஜா பயன்படுத்தியிருந்தார். பவதாரிணி மறைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அவரை நினைகூரும் விதமாக இளையராஜா உருக்கமாக பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “என் அருமை மகள் பவதா, எங்களைவிட்டுப் பிரிந்த நாள். அன்பே உருவான மகளின் பிரிவுக்கு பின்னால் அவர் எவ்வளவு அன்பு மயமாக இருந்திருக்கிறார் என்பது எனக்கு புரிந்தது. காரணம் என் கவனம் இசையிலேயே இருந்ததால், என்னுடைய குழந்தையை நான் கவனிக்காமல் விட்டுவிட்டது எனக்கு இப்போது வேதனையைத் தருகிறது.
அந்த வேதனைதான் மக்களை ஆறுதல்படுத்தும் இசையாக இருக்கிறது என்பதை நினைக்கும்போது கொஞ்சம் மன ஆறுதலாக இருக்கிறது. பவதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 12 அன்று அவருக்கு திதி வருகிறது. அதனால் இரண்டையும் சேர்த்து நல்ல நினைவுநாள் நிகழ்ச்சி வைக்கலாம் என்ற எண்ணம் இருக்கிறது. அதில் எல்லா இசைக் கலைஞர்களும் வந்து பங்கெடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். என் மகளின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன்”
இவ்வாறு இசையமைப்பாளர் இளையராஜா பேசியுள்ளார்.