#Gaza மீது வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல் | 87 பேர் உயிரிழப்பு!
காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 87பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் கொடூர தாக்குதல் நடத்தியதில், இஸ்ரேல் மக்கள் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். பணய கைதிகளாக சிலர் சிறை பிடித்து செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாகவும், பணய கைதிகளை மீட்கும் நோக்கிலும் காசாவை இலக்காக கொண்டு இஸ்ரேல் பாதுகாப்பு படை நடத்தி வரும் தாக்குதலில் 42,000 மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று (அக்.19ம் தேதி) நள்ளிரவு, வடக்கு காசாவின் பெய்ட் லாஹியா நகரத்தில் கொடூர வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காசாவில் குடியிருப்புப் பகுதிகள் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 87 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள் : “மாதவிடாய் காலத்தில் பெண்கள் வீட்டிற்குள் நுழைய தடை..”- இப்படிப்பட்ட இந்தியாவில் வாழ்வதாக #SupremeCourt நீதிபதி வேதனை!
பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தொலைத்தொடர்பில் பிரச்னை ஏற்பட்டுள்ளதால் சம்பவ இடத்திலிருந்து தகவல்களை முழுமையாகப் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக, மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் காஸா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, சேதமடைந்த கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளோர் பலர், இன்னும் மீட்கப்படாமல் இருப்பதாகவும் காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.