விண்வெளியில் ‘பாரதிய விண்வெளி நிலையம்’ நிறுவ இஸ்ரோ திட்டம்!
பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி, விண்வெளியில் 'பாரதிய விண்வெளி நிலையத்தை கட்டமைக்க திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்தில் விஞ்ஞான பாரதி எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பாக நடைபெற்ற பாரதிய அறிவியல் சம்மேளனத்தில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்திந்த அவர் பேசியதாவது:
சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா-எல்1 விண்கலம் வரும். ஜன. 6ம் தேதி L1(லெக்ராஞ்சியன்1) புள்ளியில் நுழைய உள்ளது. இந்த விண்கலம் எல்1 புள்ளியில் நுழையும் துல்லியமான நேரம் அதற்கான தருணம் வரும்போது அறிவிக்கப்படும்.
ஆதித்யா விண்கலம் L1 புள்ளியை அடையும் போது, அது புள்ளியை விட்டு வழிமாறாத வகையில் எஞ்ஜின் ஒரு முறை மீண்டும் இயக்கப்படும். இந்த விண்கலம் L1 புள்ளியில் சரியாக தரையிரங்கும் பட்சத்தில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மிகவும் முக்கியமான அனைத்து தரவுகளையும் சேகரித்து பூமிக்கு அனுப்பும். சூரியனின் இந்த தரவுகள் இந்தியாவிற்கு மட்டுமல்லாமல் உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.
பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி, 'பாரதிய விண்வெளி நிலையம்' என்று அழைக்கப்படும் இந்திய விண்வெளி நிலையத்தை கட்டமைக்க இஸ்ரோ திட்டம் வகுத்துள்ளது."
இவ்வாறு இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.
சூரியனின் வளி மண்டலம் மற்றும் வெளிப்புற அடுக்குகளை ஆய்வு செய்ய ஆதித்யா-எல்1 விண்கலம் செப்டம்பர் மாதம் ஆந்திரவின் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.