போர் அமைச்சரவையை கலைத்தார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!
காசா போா் தொடா்பான முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக அமைக்கப்பட்ட போா் அமைச்சரவையை இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கலைத்துள்ளாா்.
கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் – காசா ஆகிய இரு நாடுகள் இடையே போர் பூண்டது. இதில் ஏராளமான ராணுவ வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்தனர். ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டுவதாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்தாா். இதனிடையே மார்ச் மாத இறுதியில் காசாவில் தற்காலிக போர்நிறுத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த தற்காலிக போர் நிறுத்தமும் ஏப்ரல் தொடக்கத்திலேயே முடிவுக்கு வந்தது.
இதனையடுத்து காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியது. வான்வழி, தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டது. இதனால் மீண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதனிடையே, இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, எதிர்க்கட்சி தலைவர் பென்னி கான்ட்ஸ், பாதுகாப்புத் துறை அமைச்சா் யோவாவ் காலன்ட் உள்ளிட்ட 6 பேர் அடங்கிய போா் அமைச்சரவை அமைக்கப்பட்டது.
அமைச்சரவை ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான போரை வழி நடத்திச் செல்வதற்கான முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக அமைக்கப்பட்டது. இதனிடையே, கடந்த 9-ம் தேதி பென்னி கான்ட்ஸ் இந்த போா் அமைச்சரவையில் இருந்து வெளியேறினாா். இந்த நிலையில், இந்த போா் அமைச்சரவையை இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கலைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இஸ்ரேல் அதிகாரிகள் கூறும் போது, "காசா போரை முன்னெடுத்துச் செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த போா் அமைச்சரவையை பிரதமா் நெதன்யாகு கலைத்துள்ளாா். இனி முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் ஆலோசனை நடத்தி முடிவுகளை எடுப்பதற்காக, சிறிய அளவிலான ஆலோசனைக் குழுக்களை நெதன்யாகு அமைப்பாா் என்று எதிா்ப்பாா்க்கப்படுகிறது" என்றனர்.