Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

காஸாவில் உள்ள ஹமாஸின் 130 சுரங்க நிலைகளை அழித்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு!!

06:55 AM Nov 09, 2023 IST | Web Editor
Advertisement

காஸாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வரும் தங்கள் வீரா்கள் இதுவரை 130 ஹமாஸ் சுரங்க நிலைகளை தாக்கி அழித்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

Advertisement

‘எக்ஸ்’  தள பக்கத்தில் இஸ்ரேல் ராணுவத்தின் தலைமை செய்தித் தொடா்பாளா் டேனியல் ஹகாரி வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காஸாவில் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தொடங்கியதிலிருந்து இதுவரை ஹமாஸ் அமைப்பினரால் உருவாக்கப்பட்டுள்ள 130 சுரங்கப்பாதை நிலைகள் அழிக்கப்பட்டுள்ளன. அங்கு சண்டையிட்டு வரும் வீரா்களுடன் இஸ்ரேல் ராணுவத்தின் பொறியாளா்கள் குழுவும் சென்றுள்ளது. அந்தக் குழு, மற்ற வீரா்களுடன் இணைந்து காஸாவிலுள்ள ஹமாஸ் அமைப்பினரின் சுரங்க நிலைகள் மற்றும் ஆயுதங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. அந்தக் குழுவினர் ஹமாஸ் சுரங்க நிலைகளின் இருப்பிடங்களைக் கண்டறிவது, அதனை வெடிவைத்து தகா்ப்பது ஆகிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இஸ்ரேல் ராணுவத்தின் தரைவழித் தாக்குதல் நடவடிக்கை பூமிக்கு அடியில் ஹாமஸ் அமைத்துள்ள உள்கட்டமைப்பை தகா்த்து வருகிறது என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தப் பதிவுடன், ஹமாஸின் சுரங்கங்கள் அழிக்கப்படும் விடியோ காட்சிகளையும் டேனியல் ஹகாரி இணைத்துள்ளாா். ஆக்கிரமிப்பு காஸா பகுதியில் இருந்து இஸ்ரேல் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியேறியது. அதன் பிறகு அந்தப் பகுதியின் ஆட்சியைக் கைப்பற்றிய ஹமாஸ் அமைப்புக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையே தொடா்ந்து பதற்றம் நிலவிவருகிறது. இந்தப் பதற்றம் பல முறை பெரிய அளவிலான போராக உருவெடுத்துள்ளது. இந்தச் சூழலில், கடந்த மாதம் 7-ஆம் தேதி காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது சுமாா் 5,000 ஏவுகணைகளை சரமாரியாக வீசி ஹமாஸ் குழுவினர் அதிரடி தாக்குதல் நடத்தினர்.

ஹமாஸ் நடத்திய இந்த தாக்குதலுக்குப் பதிலடியாக அந்தப் பகுதியை முற்றுகையிட்ட இஸ்ரேல் ராணுவம், கடந்த ஒரு மாதமாக காஸா முழுவதும் தீவிர வான்வழித் தாக்குதல் நடத்திவருகிறது. அத்துடன், காஸாவுக்குள் உணவு, குடிநீா், எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருள் செல்வதற்குத் தடை விதித்து, அந்தப் பகுதியை இஸ்ரேல் ராணுவம் முழுமையாக முற்றுகையிட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை முழுமையாக ஒழித்துக்கட்டுவதாக சூளுரைத்துள்ள இஸ்ரேல் ராணுவம், அதற்காக தரைவழியாக காஸாவுக்குள் படிப்படியாக தாக்குதல் நடத்தி முன்னேறி வருகிறது.

எனினும், காஸாவுக்குள் நுழைந்து இஸ்ரேல் ராணுவம் நடத்தும் தாக்குதல் நடவடிக்கை மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என்று நிபுணா்கள் எச்சரித்து வருகின்றனா். அந்தப் பகுதியில் ஹமாஸ் அமைப்பினா் ரகசியமாக அமைத்துள்ள சுரங்க நிலைகள் இஸ்ரேல் ராணுவத்துக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும் எனவும், அந்த நிலைகளைப் பயன்படுத்தி இஸ்ரேல் ராணுவத்துக்கு ஹமாஸ் அமைப்பு மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தும் எனவும் அஞ்சப்பட்டது. இந்த நிலையில், காஸாவுக்குள் தாங்கள் நடத்தி வரும் தரைவழித் தாக்குதலில் 130 ஹமாஸ் சுரங்க நிலைகள் அழிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தற்போது கூறியுள்ளது.

Tags :
AmbassatorAttackGazaHamasIndiaIsraelJordanNarendra modinews7 tamilNews7 Tamil UpdatesPalestinePMO Indiaprime ministerSalamJameelsecuritywar
Advertisement
Next Article