காஸா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் - 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபரில் இஸ்ரேலுக்குள் நுழைந்து சுமார் 1,200 பேரைக் கொன்று 251 பேரை கடத்தியபோது, இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் தொடங்கியது. இப்போரில் இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதலால் இதுவரை 48,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் 2.3 மில்லியன் மக்கள் இந்த போரில் இடம்பெயர்ந்துள்ளதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீடித்து வந்த இந்த போரை அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் தலையீட்டால் நடப்பாண்டு ஜனவரியில் போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் இரு நாடுகளில் உள்ள பணயக்கைதிகளை விடுவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு மூன்று கட்டங்களாக திட்டமிடப்பட்டது.
இந்த நிலையில் இஸ்ரேல் ராணுவம்காஸா, டெய்ர் அல்-பலா, கான் யூனிஸ் மற்றும் ரஃபா உள்ளிட்ட பல இடங்களில் வான்வழித் தாக்குதல்கள் தாக்குதல் நடத்தியுள்ளது. இது போர் நிறுத்தத்திற்கு பிறகு நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாக அமைந்துள்ளது. இதில் 200க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் சார்பில் காஸா பணயக்கைதிகளை விடுவிப்பதில் சுணக்கம் காட்டி வருவதாக குற்றம் சாட்டி விரிவான தாக்குதல் நடைபெறும் என தெரிவித்துள்ளது. காஸாவில் இன்னும் மீதமுள்ள 59 பணயக்கைதிகளின் நிலை குறித்து இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே பல வாரங்களாக நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை நிலையில், இத்தாக்குதல் நடந்துள்ளது.