காசா பள்ளி மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்: 27 பேர் உயிரிழப்பு!
காசா பகுதியில் உள்ள பள்ளிக் கட்டடம் ஒன்றில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் சுமார் 27 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இரு தரப்பினரும் போரை துவங்கினர். இதில் ஏராளமான ராணுவ வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்தனர். இதனிடையே மார்ச் மாத இறுதியில் காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டது.
ஆனால் இந்த தற்காலிக போர் நிறுத்தமும் ஏப்ரல் தொடக்கத்திலேயே முடிவுக்கு வந்தது. இதனையடுத்து காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியது. வான்வழி, தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. இதனால் மீண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில் மீண்டும் ஒரு கொடூர தாக்குதலை காசா மீது இஸ்ரேல் நடத்தியுள்ளது. நேற்று இரவு காசாவில் உள்ள ஐ.நா பள்ளியின் மீது வான்வழித் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலை இஸ்ரேல் தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளது. அந்த பள்ளி வளாகத்தில் ஹமாஸ் பயங்கரவாதிகள் தங்கி இருந்ததாகவும், அதன் காரணமாகவே அங்குத் தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது.
இந்த தாக்குதலில் தற்போதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37ஆக உயர்ந்துள்ளதாக ஹமாஸின் அல்-அக்ஸா தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் முழுமையான தகவல்கள் எதையும் வழங்கவில்லை.