காசாவில் இஸ்ரேல் இன அழிப்பை நடத்தி வருகிறது - Amnesty International அமைப்பு குற்றச்சாட்டு!
காசாவில் இஸ்ரேல் இன அழிப்பில் ஈடுபடுவதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே காசாவில் ஏறக்குறைய ஒருவருடத்திற்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் காசா பகுதியிலிருந்து இடம் பெயர்ந்தனர். இப்போரில் இதுவரை 44,600பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்திற்கும் அதிகாமானோர் காயமடைந்துள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதம் என்பது அதிகமாக உள்ளதாக சர்வதேச சேவை அமைப்புகள் அறிவித்துள்ளன.
ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக் கட்டப் போவதாக சூளுரைத்த இஸ்ரேல், காஸா பகுதியை முற்றுகையிட்டு அங்கு வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக ஹமாஸின் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை ஈரானில் வைத்து இஸ்ரேல் கொலை செய்தது. இதனைத் தொடர்ந்து ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹஸன் நஸ்ரல்லாஹ் வீட்டின் மீது ஏவுகணை தாக்குதலை நடத்திய இஸ்ரேல் அவரையும் கொலை செய்தது. மேலும் சமீபத்தில் இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸின் அடுத்த தலைவரான யஹ்யா சின்வாரும் கொல்லப்பட்டார்.
கடந்த வாரம் காசா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் 1000க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ள்ளதாக தெரிவித்துள்ளது. இதேபோல இந்த ஒரு வருடம் மட்டுமே பாலஸ்தீனத்தில் கொல்லப்பட்டுள்ள பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை இதுவரை நடைபெற்ற உலகப் போர்களில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கையை விட இருமடங்கு அதிகம் என்று பல சர்வதேச பத்திரிகையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். பத்திரிகையாளர்களை பாதுகாக்கும் அமைப்பு (Committee to Protect Journalists ) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 180க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் இவர்களில் அதிகமானோர் பாலஸ்தீனியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் காஸாவில் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பாக ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் மனித உரிமை அமைப்பு ஒரு விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..
“ இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனத்தில் நடத்தும் தாக்குதலை ஆய்வு செய்ததில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் இன அழிப்பில் ஈடுபடுவது தெரியவருகிறது. இது சர்வதேச சமுதாயத்துக்கு ஓர் எச்சரிக்கை மணியாகும். இந்த இன இழிப்பு இப்போதே தடுத்து நிறுத்தப்படவேண்டும். இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி நடத்திய தாக்குதலை நியாயப்படுத்த முடியாதுதான். அதே போல், காஸாவில் பொதுமக்களிடையே ஆயுதக் குழுவினர் கலந்திருப்பதையும் மறுப்பதிற்கில்லை. ஆனால், அந்தப் பகுதியில் இஸ்ரேல் நடத்திவருவது இன அழிப்பே ஆகும். இந்தக் குற்றத்துக்கு அமெரிக்காவும் இஸ்ரேலின் பிற நட்பு நாடுகளும் துணை போவதாகவே கருத முடியும். ” என ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் இந்த ஆய்வறிக்கை கூட உண்மைகளைத் திரித்து பொய்யாகப் புனையப்பட்டது என்று இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சகம் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.