இஸ்ரேல் - ஈரான் போரை நிறுத்த வேண்டும்: அதிபர் டிரம்ப் வலியுறுத்தல்!
ஈரானின் அணு ஆயுத தளங்கள், ஏவுகணை மையங்கள் மீது கடந்த 13ம் தேதி ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் இஸ்ரேல் சரமாரியான வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், ஈரானின் மூன்று முக்கிய படைத்தளபதிகள் மற்றும் அணுசக்தி விஞ்ஞானிகள் பலர் கொல்லப்பட்டனர். மிகப்பெரிய அணு ஆயுத தளம் பலத்த சேதம் அடைந்தது. மேலும் 78 பேர் உயிரிழந்ததாகவும், 320 படுகாயமடைந்ததாகவும் ஈரான் ஐநா பிரதிநிதி தெரிவித்தார்.
இதற்குப் பதிலடியாக, நேற்று காலை வரை ஈரான் “ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்” என்ற பெயரில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமை நோக்கி ஏவுகணைகளை ஏவியது. இந்த தாக்குதல்களில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 34 பேர் காயமடைந்தனர். மேலும் ரிஷோன் லெசியோனில் நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் உயிரிழந்த நிலையில் 19 பேர் காயமடைந்தனர்.
இதனிடையே இஸ்ரேல் – ஈரான் நாடுகள் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் இரு நாடுகளும் பரஸ்பரம் ஏவுகணைகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இஸ்ரேல் வீசிய ஏவுகணையால் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள எண்ணெய்க் கிடங்கு பற்றி எரிந்து வருவதாக ஈரானிய எண்ணெய் அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இஸ்ரேலும், ஈரானும் தொடர்ந்து 3-வது நாளாக பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
"ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும். விரைவாக நல்ல முடிவு எடுத்து இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்த நான் எடுத்த முயற்சிகளை ஏற்றுக்கொண்டு அந்த தலைவர்கள் செயல்பட்டது போல இஸ்ரேல் மற்றும் ஈரான் தலைவர்களும் போர் நிறுத்தத்தில் ஈடுபட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.