அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை ரத்து செய்தது இஸ்ரேல்!
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் 2வது முறையாக பதவியேற்றுள்ளார். இதையடுத்தது டிரம்ப் பல நாடுகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் வரி விதிப்புகளை அமல்படுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக கனடா, மெக்சிகோ நாடுகளுக்கு 25 சதவீதம் கூடுதல் வரியும் சீனாவுக்கு 10 சதவீதம் கூடுதல் வரியும் விதித்து உத்தரவிட்டிருந்தார்.
இந்த வரி விதிப்பு நடைமுறை பிப்ரவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மீது 100 சதவீத வரி விதிப்பை டிரம்ப் அரசு அமல்படுத்தும் முடிவெடுத்துள்ளது. இதனிடையே வரி விதிப்புகள் இன்று முதல உடனடியாக அமலுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, டொனால்ட் டிரம்ப் புதிய வரி விதிப்பு திட்டம் ஒன்றை, சுதந்திர நாள் என்ற பெயரில் இன்று வெளியிட உள்ளார்.
இந்த சூழலில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகையில், "அமெரிக்க தயாரிப்பு கார்களுக்கு ஐரோப்பிய யூனியன் அமைப்பு வரிகளை குறைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார். இதன் காரணமாக 2.5 சதவீதம் என்ற அளவில் வரிகள் இருக்கும். இந்தியாவும், பெரிய அளவில் வரிகளை குறைக்க போகிறது என சமீபத்தில் கேள்விப்பட்டேன். நீண்ட காலத்திற்கு முன்பே சிலர் ஏன் இதனை செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.
டிரம்பின் வரி விதிப்பு முடிவிற்கு இடையே, ஐரோப்பிய யூனியன் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் அமெரிக்கா மீது விதித்த வரிகளை குறைத்துள்ளன என செய்தி வெளியான சூழலில், இஸ்ரேலும் வரி ரத்து பற்றிய அறிவிப்பை வெளியிட்டு அமெரிக்காவை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
இது குறித்து இஸ்ரேல் தரப்பில் வெளியாகியுள்ள செய்தியில், "இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, நிதி அமைச்சர் பிஜாலெல் ஸ்மோத்ரிச், பொருளாதார மற்றும் தொழில் துறை அமைச்சரான நிர் பர்கத் உத்தரவின்பேரில் அமெரிக்க தயாரிப்பு பொருட்கள் மீது விதிக்கப்பட்ட அனைத்து சுங்க வரிகளும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை அந்நாட்டின் நாடாளுமன்றத்திற்கான நிதி குழு வழங்கியுள்ளது.
அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியாக உள்ள இஸ்ரேல், அதன் முக்கிய வர்த்தக நட்புறவு நாடாகவும் உள்ளது. இதன்படி, 2024-ம் ஆண்டில் அமெரிக்காவுக்கான சரக்கு ஏற்றுமதி 1,730 கோடி அமெரிக்க டாலராக இருந்தது. இதேபோன்று, சேவை ஏற்றுமதி 1,670 கோடி அமெரிக்க டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.