இஸ்ரேல் - ஹமாஸ் போர்: முதல் இந்தியர் உயிரிழப்பு!
இஸ்ரேல் - ஹமாஸ் போரில் முதன்முறையாக இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த வருடம் அக்டோபர் 7-ம் தேதி போர் தொடங்கியது. தொடர்ந்து இரு தரப்பினரும் தாக்குதல்களை தொடங்கினர். இதில் ஏராளமான ராணுவ வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்தனர். இருதரப்பு குடிமக்கள் மட்டுமன்றி கணிசமான வெளிநாட்டினரும் பலியாகி வருகின்றனர். இஸ்ரேலில் இருந்து ஹமாஸ் கடத்திச் சென்ற சாமானியர்களில் பல வெளிநாட்டினரும் அடங்குவர். அவர்களில் அமெரிக்கா சுற்றுலா பயணிகள் மற்றும் தாய்லாந்து தொழிலாளர்கள் எனப் பல பிணைக்கைதிகள் இடைக்கால போர் நிறுத்தத்தின்போது விடுவிக்கப்பட்டனர்.
இதுகுறித்து, இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம், உயிரிழந்த இந்தியர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில், “நேற்று மதியம் வடக்கு கிராமமான மார்கலியோட்டில் பழத்தோட்டத்தில் பயிரிட்டுக்கொண்டிருந்த அமைதியான விவசாயத் தொழிலாளர்கள் மீது ஷியா பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லா கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டது. இதில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தது மற்றும் இருவர் காயமடைந்தது எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
உயிரிழந்தவர் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்களது பிரார்த்தனைகள். காயமடைந்தவர்களுக்கு இஸ்ரேலிய மருத்துவமனைகள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றன. பயங்கரவாதத்தால் காயமடைந்த அல்லது கொல்லப்பட்டவர்களை, இஸ்ரேல் - வெளிநாட்டினர் என்ற பேதமின்றி சமமாகவே கருதுகிறோம். இழப்பு கண்ட குடும்பங்களுக்கு ஆதரவாகவும் அவர்களுக்கு உதவிகளை வழங்கவும் நாங்கள் இருப்போம்” என்று தெரிவித்துள்ளது.