இஸ்ரேல் – ஹமாஸ் போர்: பூர்வீக இந்தியர் மற்றும் 12 இஸ்ரேல் வீரர்கள் உயிரிழப்பு!
காஸாவுக்குள் நுழைந்துள்ள இஸ்ரேல் ராணுவத்தினருக்கும், அங்குள்ள ஹமாஸ் படையினருக்கும் நடைபெற்று வரும் கடுமையான சண்டையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹரேல் சாலமன் மற்றும் 12 இஸ்ரேல் ராணுவத்தினர் உயிரிழந்தனர்.
அக்டோபர் 7 அன்று, ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலிய எல்லையைக் கடந்து பேரழிவைச் செய்தனர். இதில் சுமார் 1,400 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான இஸ்ரேலிய குடிமக்கள் காயமடைந்தனர். ஹமாஸ் இஸ்ரேலிய பிரதேசத்தை தாக்கி 229 பேரை பணயக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளது.
4 வாரங்களைக் கடந்து நீடித்து வரும் இப்போரில் இஸ்ரேல் படையினர் காஸா எல்லைக்குள் தரை வழியாக நுழைந்துள்ளனர். வான் வழி, கடல் வழி தாக்குதல்களைத் தொடர்ந்து தரை வழியாக நடத்தப்படும் இந்தத் தாக்குதலை இஸ்ரேல் – ஹமாஸ் போரின் 2ம் கட்டம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட விடியோக்களில் காஸாவுக்குள் மேலும் ஆழமாக ஊடுருவியுள்ளதை உறுதிப்படுத்தியது. கடந்த 5 நாள்களாக எல்லைப் பகுதிக்குள் தாக்குதல் நடத்தியவாறு கொஞ்சம் கொஞ்சமாக காஸாவுக்குள் முன்னேறி வரும் இஸ்ரேல் தரைப்படையினர், அந்தப் பகுதியில் பல்வேறு இடங்களில் ஹமாஸ் அமைப்பினருடன் மோதலில் ஈடுபட்டனர். பிராந்தியத்தின் தலைநகரான காஸா சிட்டியை சுற்றிலும் இரு தரப்பினருக்கும் இடையே நேற்று கடுமையான சண்டை நடந்தது.
இந்நிலையில் காஸாவுக்குள் நுழைந்துள்ள இஸ்ரேல் ராணுவத்தினரும், அங்குள்ள ஹமாஸ் படையினரும் தொடர்ந்து கடுமையான சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹரேல் சாலமன் மற்றும் 12 இஸ்ரேல் ராணுவத்தினர் உயிரிழந்தனர். இதில் 20 வயது நிரம்பிய ஹரேல் சாலமன், தெற்கு இஸ்ரேல் நகரான டிமோனாவைச் சோ்ந்தவர். இந்த மோதலில் ஏராளமான ஹமாஸ் அமைப்பினர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த 26 நாள்களாக நடந்து வரும் மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,300-ஐ கடந்துள்ளது. இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 8,796 போ் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.