இஸ்ரேல் – ஹமாஸ் போர்: 100 நாட்களில் 10,000 குழந்தைகள் உயிரிழப்பு - இங்கிலாந்து நிறுவனம் அறிக்கை!
இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போரில் கடந்த 100 நாட்களில் 10,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டதாக இங்கிலாந்து நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே காசாவில் ஏறக்குறைய 100 நாட்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 25000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். இஸ்ரேல் படைகளின் தொடர் தாக்குதலால் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் உள்ளிட்ட அப்பாவிகளும் பாதிக்கப்படுவதாக ‘சேவ் தி சில்ரன்’ (உலகளவில் குழந்தைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு) என்ற அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு இந்த கொலைகள் நடந்துள்ளன. இந்த தாக்குதலில் இருந்து தப்பிய குழந்தைகள், உடலில் காயங்களுடன் போதிய மருத்துவ வசதியின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களது பெற்றோரை இழந்து பல்வேறு கொடுமைகளைச் சந்தித்து வருகின்றனர். காசாவில் மட்டும் சுமார் 1,000 குழந்தைகள் ஒன்று அல்லது இரண்டு கால்களையும் இழந்துள்ளனர்.