கடும் போரில் இஸ்ரேல்-ஹமாஸ் படையினர் - சுகாதாரப் பேரழிவின் விளிம்பில் காஸா!
காஸாவுக்குள் நுழைந்துள்ள இஸ்ரேல் ராணுவத்தினரும், அங்குள்ள ஹமாஸ் படையினரும் கடுமையான சண்டையில் ஈடுபட்டனர். காஸா சுகாதாரப் பேரழிவின் விளிம்பில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
அக்டோபர் 7 அன்று, ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலிய எல்லையைக் கடந்து பேரழிவைச் செய்தனர். இதில் சுமார் 1,400 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான இஸ்ரேலிய குடிமக்கள் காயமடைந்தனர். ஹமாஸ் இஸ்ரேலிய பிரதேசத்தை தாக்கி 229 பேரை பணயக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளது.
4 வாரங்களைக் கடந்து நீடித்துவரும் இப்போரில் இஸ்ரேல் படையினர் காஸா எல்லைக்குள் தரை வழியாக நுழைந்துள்ளனர். வான் வழி, கடல் வழி தாக்குதல்களைத் தொடர்ந்து தரை வழியாக நடத்தப்படும் இந்தத் தாக்குதலை இஸ்ரேல் – ஹமாஸ் போரின் 2ம் கட்டம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த திங்கள்கிழமை சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள விடியோக்களில், மத்திய காஸாவில் தெற்கு மற்றும் வடக்குப் பகுதிகளை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையில் இஸ்ரேல் ராணுவத்தின் பீரங்கியும், புல்டோஸரும் நிற்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இதையடுத்து, அந்தத் சாலையை இஸ்ரேல் கைப்பற்றி போக்குவரத்தை முடக்கியுள்ளதாகக் கூறப்பட்டது.
கடந்த 4 நாள்களாக எல்லைப் பகுதிக்குள் தாக்குதல் நடத்தியவாறு கொஞ்சம் கொஞ்சமாக காஸாவுக்குள் முன்னேறி வரும் இஸ்ரேல் தரைப்படையினர், அந்தப் பகுதியில் பல்வேறு இடங்களில் ஹமாஸ் அமைப்பினருடன் மோதலில் ஈடுபட்டனர். பிராந்தியத்தின் தலைநகரான காஸா சிட்டியை சுற்றிலும் இரு தரப்பினருக்கும் இடையே நேற்று கடுமையான சண்டை நடந்தது.
இது குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஸாவுக்குள் ஹமாஸ் நிலைகள் மீது தரைவழியாக நேற்றுமுன் தினம் இரவு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 300 ஹமாஸ் இலக்குகள் தாக்கி அழிக்கப்பட்டன. இது தவிர, காஸா பகுதிக்குள் ஆழமாக முன்னேறியுள்ள இஸ்ரேல் படையினர், அங்கு எதிர்த் தாக்குதல் நடத்தும் ஹமாஸ் படையினருடன் மிகக் கடுமையான சண்டையில் ஈடுபட்டுள்ளனர். காஸா சிட்டியைச் சுற்றிலும் இந்த சண்டை நடைபெறுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கு காஸாவிலுள்ள ஜபாலிலா அகதிகள் முகாமில் நேற்று நடத்தப்பட்ட குண்டுவீச்சில் 50 அகதிகள் உயிரிழந்ததாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த முகாமில் தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்தான் என்று பாலஸ்தீன அதிகாரிகள் கூறினாலும், இது குறித்து இஸ்ரேல் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.