அமலுக்கு வந்தது #Israel - ஹமாஸ் போர் நிறுத்தம்!
கடந்த 2023 அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் - இஸ்ரேல் இடையே போர் பூண்டது. அதனைத் தொடர்ந்து, காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 46,899 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனர். இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக கத்தாரில் நடைபெற்றுவந்த பேச்சுவார்த்தையில் கடந்த ஜன. 16 உடன்பாடு எட்டப்பட்டது.
அந்த ஒப்பந்ததுக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை நேற்று முந்தினமும் (ஜன. 17), இஸ்ரேலின் முழு அமைச்சரவையும் நேற்றும் (ஜன. 18) ஒப்புதல் அளித்தது. காஸா போர் நிறுத்தம் இன்று (ஜன. 19) இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு (இஸ்ரேல் நேரப்படி காலை 8.30 மணி) அமலுக்கு வர இருந்தது.
ஒப்பந்தப்படி, போர் நிறுத்தத்தின் முதல் நாளில் இஸ்ரேலிய பணய கைதிகளில் 3 பேரை ஹமாஸ் விடுதலை செய்ய வேண்டும். அதற்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனியர்கள் 90 பேர் விடுதலை செய்யப்பட வேண்டும்.
அதேசமயம், இரு தரப்பும் விடுதலை செய்யப்பட உள்ள நபர்களின் பெயர் விவரங்களை 24 மணிநேரத்திற்கு முன்னதாகவே தெரிவிக்க வேண்டும்.அந்த வகையில், இஸ்ரேல் விடுதலை செய்ய உள்ள 90 பாலஸ்தீனியர்களின் பெயர் விவரத்தை நேற்றே வெளியிட்டுவிட்டது.
ஆனால், ஹமாஸ் ஆயுதக்குழு விடுதலை செய்ய வேண்டிய இஸ்ரேலிய பணய கைதிகளின் விவரங்கள் இந்திய நேரப்படி இன்று மதியம் 2 மணி வரை (இஸ்ரேல் நேரப்படி 10.30 ) வெளியாகவில்லை. இதனால், போர் நிறுத்தம் அமலுக்கு வராமல் இருந்தது. இதையடுத்து, காசா முனையில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 108 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், சுமார் 2 மணிநேர தாமதத்திற்குபின் விடுதலை செய்யப்பட உள்ள இஸ்ரேலிய பணய கைதிகள் 3 பேரின் பெயர் பட்டியலை ஹமாஸ் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, பணய கைதிகளான ரோமி கொனின் (வயது 24), ஏமி டமாரி (வயது 28), டோரன் ஸ்டான்பிரிசர் (வயது 31) ஆகிய 3 பேரை இன்று விடுதலை செய்வதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. இந்த நிலையில் மதியம் 2.45 மணி முதல் (இஸ்ரேல் நேரப்படி காலை 11.15 மணி) முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.