காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் | மின்சாரமின்றி 3 நாட்களாக மருத்துவமனைகள் இயங்கவில்லை -WHO தகவல்!
காசாவைவில் கடந்த 3 நாட்களாக மின்சாரமின்றி மருத்துவமனைகள் இயங்கவில்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து வருகிறது. வடக்கு காசாவில் அமைந்துள்ள பெரிய அல்-ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
இந்த போர் காரணமாக, காசா மிகவும் மோசமான நிலையில் உள்ளது. காசாவில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் காசாவில் சிக்கியுள்ளனர்.
அங்குள்ள மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், மருத்துவ வசதிகள், தண்ணீர், உணவு போன்றவை கிடைப்பதில் மிகவும் சிரமமான நிலை ஏற்பட்டுள்ளது. பல நாட்டினரும் காசாவில் உள்ள மக்களுக்கு உதவ முன்வந்தாலும், அவர்கள் வழங்கும் உதவிகள் எல்லையை கடந்து காசாவை சென்று சேர்வதில் கடும் சிரமம் உள்ளது.
இந்நிலையில் , காசாவை இஸ்ரேல் ராணுவம் முற்றுகையிட்டு குண்டுமழை பொழிந்து வரும் நிலையில், முக்கியமான அல் ஷிபா மருத்துவமனை கடந்த மூன்று நாட்களாக மின்சாரமின்றி இயங்கவில்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் மருத்துவமனையில் புதிதாக பிறந்த பல பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்களும் சுகாதாரத் துறை அதிகாரிகளும் கூறியுள்ளனர்.
இதனிடையே இஸ்ரேல் ராணுவத்தின் தொடர் தாக்குதல் காரணமாக காசாவில் இருந்து 16 லட்சம் பேர் இடம்பெயர்ந்து விட்டதாகவும், 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.