இஸ்லாமாபாத் தாக்குதல் எதிரொலி : இலங்கை அணிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு..!
இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கோண்டுள்ளது. இதில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதல் போட்டி நேற்று ராவல்பிண்டியில் நடைபெற்றது. இப்போட்டியில் இலங்கையை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றிபெற்றது.
இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கான 2 மற்றும் 3-ஆவது ஒருநாள் போட்டிகள் முறையே நவம்பர்13, 15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து இலங்கை அணி பாகிஸ்தான், ஜிம்பாப்வே ஆகிய நாடுகளை உள்ளடக்கிய முத்தரப்பு டி20 தொடரிலும் விளையாட உள்ளது.
இந்த நிலையில் நேற்று மதியம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்துக்கு வெளியே தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்ந்தது. இந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர். அதே நேரத்தில் வடக்கு பாகிஸ்தானில் உள்ள வானா கேடட் கல்லூரியும் தாக்குதலுக்கு உள்ளானது. ஆனால் இந்த தாக்குதல் பாதுகாப்புப் படையினரால் முறியடிக்கப்பட்டது.இந்த தாக்குதலுக்கு தெரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இதனை தொடர்ந்து பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வி, இலங்கை அணியின் அதிகாரிகளைச் சந்தித்து பாதுகாப்பை உறுதி செய்துள்ளதாகவும், இலங்கை வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான பாதுகாப்பைக் கண்காணிக்க பாகிஸ்தான் ராணுவம் மற்றும் துணை ராணுவ ரேஞ்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் என்று பிசிபி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக கடந்த 2009 இல், பாகிஸ்தானில் உள்ள கடாபி மைதானத்திற்கு அருகே இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் இருந்த பேருந்தை பயங்கரவாதிகள் தாக்கினர். இதனையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக சுமார் 10 ஆண்டுகளாக வெளிநாட்டு கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தானுக்கு வருகை தருவதை நிறுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.