Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“ஈஷா யோகா மைய சிவராத்திரி நிகழ்ச்சிக்கு தடை விதிக்க முடியாது” - சென்னை உயர் நீதிமன்றம்!

ஈஷா யோகா மைய சிவராத்திரி நிகழ்ச்சிக்காக தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அனைத்து விதிகளையும் பின்பற்றி உள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
02:04 PM Feb 24, 2025 IST | Web Editor
Advertisement

ஈஷா யோகா மையம் நடத்தவுள்ள மகாசிவராத்திரி நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க எதிர்ப்பு தெரிவித்து கோவையை சேர்ந்த சிவஞானன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Advertisement

அதில், வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் 295 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள ஈஷா மையம் ஆண்டுதோறும் மகாசிவராத்திரி நாளில், ஈஷா யோகா மையம் சார்பில் நிகழ்ச்சி நடத்தி வருகிறது. இந்த நாளில், ஒரே நேரத்தில் லட்சக் கணக்கான மக்கள் ஈஷா யோகா மையத்தில் கூடுகின்றனர்.

ஈஷா யோகா மையம் நடத்தும் சிவராத்திரி நிகழ்ச்சியால் வெள்ளியங்கிரி வனச்சூழல் மிகுந்த பாதிக்குள்ளவாதாக தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் ஈஷா யோகா மையம் நடத்திய சிவராத்திரி நிகழ்ச்சியில் 7 லட்சம் பேர் ஒரே நேரத்தில் கூடியதால் ஏற்பட்ட கழிவு நீர் அதிகளவில் வெளியேற்றப்பட்டு வனப்பகுதிகளை மட்டுமல்லாமல் அருகில் உள்ள விவசாய நிலங்களையும் மாசுப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

அதேபோல், அரசு நிர்ணயித்துள்ள ஒலி அளவான 45 டெசிபல் ஒலி அளவை விட அதிமான சத்தத்துடன் நிகழ்ச்சி வனப்பகுதியில் நடத்தப்படுவது விதிகள் மீறிய செயல் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார். ஈஷா யோகா மையத்தில் இருந்து கழிவு நீர் விவசாய நிலங்களில் வெளியேற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக நீதிமன்ற உத்தரவு உத்தரவிட்டும் அதை முறையாக அமல்படுத்தவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஈஷாவில் முறையான கழிவு நீர் சுத்திகரிப்பு வசதிகள் ஏற்படுத்தும் வரை ஈஷா யோகா மைய சிவராத்திரி நிகழ்ச்சியை நடத்த அனுமதி வழங்க கூடாது என உத்தரவிடக் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், லட்ச கணக்கான பேர் கூடும் போது கழிவு நீர் வெளியேற்றவும், சுத்திகரிப்பு செய்யவும் முறையாக வசதிகள் ஈஷாவில் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

ஈஷா யோகா மைய தரப்பில், உள் நோக்கத்துடன் கடைசி நேரத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் ஆஜராகி, எந்த வித நிகழ்ச்சிகளாக இருந்தாலும் அது விதிகளை மீறினால் அதற்கு அனுமதிக்க முடியாது என தெரிவித்திருந்தார்.

இதை ஏற்ற நீதிபதிகள், ஈஷா யோகா மைய சிவராத்திரி நிகழ்ச்சிக்காக முறையான கழிவு நீர் வெளியேற்றவும், சுத்திகரிப்பு செய்யவும், ஒலி,ஒளி மாசு ஏற்படாமல் இருக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பாகவும்,
கடந்தாண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்தும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இன்று அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.

அதன்படி இன்று அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் அறிக்கை தாக்கல் செய்தார். அதில் தென் மண்டல பசுமை தீர்ப்பாய உத்தரவின் அடிப்படையில் அனைத்து விதிமுறைகளையும் முறையாக பின்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது மனுதாரர் தரப்பில், தனியார் இடத்தில் பொதுவெளியில் நடத்தினாலும் கூட ஒலி மாசு விதிகளை கடைபிடிக்க வேண்டும் எனவும், இரவு நேரத்தில் ஒலி பெருக்கியை பயன்படுத்தினாலும் 12 மணிவரை மட்டுமே பயன்படுத்த முடியும் என குறிப்பிட்டார்.

ஈஷாவில் முறையான கழிவுநீர் சுத்திகரிப்புக்காக மூன்று புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, சிவராத்திரி நிகழ்ச்சிக்கு 7 லட்சம் மக்கள் வருகை தரும் நிலையில் இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் போதுமானவை அல்ல என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஈஷா வளாகத்தில் உள்ள கல்வி நிறுவன கட்டிடத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் 70 ஏக்கர் நிலத்தில் தான் விழா நடப்பதாகவும், சரவணம் பட்டியில் வசிக்கும் மனுதாரர் எப்போதெல்லாம் சிவராத்திரி விழா வருகிறதோ அப்போதெல்லாம் பக்கத்து நிலத்துக்காரர் ஆகிவிடுவதாக ஈஷா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், ஒலி மாசு கட்டுப்படுத்தவும், கழிவு நீர் சுத்திகரிப்புக்கும் போதுமான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ள நிலையில், வெறும் அச்சத்தின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் எந்த காரணமும் இல்லை எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags :
Isha YogaMadras High CourtMaha Shivratri
Advertisement
Next Article