வடகொரியாவில் கே-டிராமா பார்த்தால் மரணதண்டனையா..? - ஐ.நா. அதிர்ச்சி தகவல்!
கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள நாடு தான் வடகொரியா. இந்நாட்டின் அதிபராக கிம் ஜாங் உன் உள்ளார். இந்நாட்டில் மக்களின் உணவு பழக்க வழக்கம் சிகையளங்காராம் உள்ளிட்டவைக்கு அங்கு கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. மேலும் வட கொரியாவில் சிறிய தவறுகளுக்கு கூட அதிகப்படியான தண்டனைகள் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் வட கொரியாவில் பெருமளவு மனித உரிமை மீறல்கள் நிகழ்வதாக பல்வேறு மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டிவருகின்றன.
இந்த நிலையில் ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையமானது, வடகொரியாவில் இருந்து வெளியேறிய 300க்கு மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தியது. இந்த விசாரணையை அடிப்படையாக கொண்டு நேற்று ஜெனீவாவில் ஐநா மனித உரிமை கவுன்சிலில் 14 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த் அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த அறிக்கையில், வடகொரியாவில் புதிய சட்டங்களால் குடிமக்கள் மீதான கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அதிகரித்துள்ளதாகவும், மக்கள் சிலர் கட்டாய தொழிலாளர் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் பியோங்யாங்கில் உள்ள அதிகாரிகள் ஆயிரக்கணக்கான அனாதைகள் மற்றும் சாலையோர குழந்தைகளை நிலக்கரிச் சுரங்கங்கள் மற்றும் பிற சூழல்களில் வேலை செய்யப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. , பல மூத்த அதிகாரிகள் "அரச விரோத செயல்களுக்காக" தூக்கிலிடப்பட்டதாக அறிக்கை கூறுகிறது.
2020 முதல், அங்கீகரிக்கப்படாத ஊடகங்கள், போதைப்பொருள் மற்றும் பொருளாதார குற்றங்கள், விபச்சாரம், ஆபாசப் படங்கள், கடத்தல் மற்றும் கொலை ஆகியவற்றிற்கு மரணதண்டனை பயன்படுத்தப்படுவதாக தப்பிவந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அறிக்கை குறித்து பேசியுள்ள வட கொரியாவுக்கான மனித உரிமைகள் ஆணையர் ஜேம்ஸ் ஹீனன், "கோவிட்-19 காலத்துக்கு பிறகு சாதாரண மற்றும் அரசியல் குற்றங்களுக்கான மரணதண்டனைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அண்டை நாடான தென் கொரியாவின் கே-டிராமாக்கள் உட்பட வெளிநாட்டு தொலைக்காட்சித் தொடர்களை பார்த்தல் மற்றும் பகிர்தல் ஆகியவற்றிற்காக மக்கள் தூக்கிலிடப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.
ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் இந்த அறிக்கையை வட கொரிய அரசாங்கம் இந்த அறிக்கையை நிராகரித்தள்ளது குறிப்படத்தக்கது.