இது சென்னையா ? ஊட்டியா? - அதிகாலை முதலே கடும் பனி மூட்டம்!
நள்ளிரவு பெய்த மிதமான மழையால் சென்னையின் பல பகுதிகளில் அதிகாலை முதலே பனிமூட்டத்துடன் காணப்படுகிறது.
சென்னையில், கடந்த சில நாட்களாகவே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. நேற்று சற்று கருமேகங்கள் அதிகம் சூழ்ந்து மெல்லிய தூரல் விட்டுவிட்டு பெய்து பகல் நேரத்திலேயே நகரம் முழுவதும் குளிரத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நள்ளிரவில் மிதமான மழை பெய்த நிலையில் சில இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கின்றன.
இதன்படி இன்றும் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது
நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதேபோல அடுத்த ஒருவாரத்திற்கு குறிப்பாக ஜனவரி 18ம் தேதி வரை தமிழகத்தின் சில பகுதிகள் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், கடலோர மாவட்டங்களிலும் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வுமையம் கணித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு பல இடங்களில் போகி பண்டிகை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பழைய பொருட்களை கொளுத்தியதால் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னையில் பெய்த மிதமான மழையால் அதிகாலை சாலை முழுவதும் ஒருவித புகை மூட்டத்துடன் காணப்பட்டது.