“மூத்த வழக்கறிஞர்கள் நியமனத்தில் உறவினர்களுக்கு சலுகையா?”... பொதுநல மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!
டெல்லியில் 70 வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களாக சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டனர். ஆனால், தனது ஒப்புதல் இல்லாமலே 70 வழக்கறிஞர்களை மூத்த வழக்கறிஞர்களாக நியமனம் செய்யக்கூடிய அறிவிப்பாணை தயார் செய்யப்பட்டதாக கூறி நிரந்தர குழுவின் உறுப்பினர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
இதற்கிடையில் உச்ச நீதிமன்றத்தில், வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பாறா என்பவர், மூத்த வழக்கறிஞர்களாக நியமனம் செய்யப்படுபவர்கள் நீதிபதிகளின் உறவினர்களாக அல்லது நெருங்கியவர்களாக உள்ளனர் என தெரிவித்தும், டெல்லி உயர் நீதிமன்றத்தில் 70 வழக்கறிஞர்கள் மூத்த வழக்கறிஞர்களாக நியமனம் செய்யபட்ட முடிவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கை முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள் பி.ஆர் கவாய் மற்றும் கே.வினோத் சந்திரன் அமர்வு, எத்தனை நீதிபதிகளின் உறவினர்கள் மூத்த வழக்கறிஞர்களாக அல்லது நீதித்துறை பணியிடங்களில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்ற பட்டியல் உள்ளதா? என கேள்வி எழுப்பியதோடு, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நீதித்துறையின் முன்பு முன்வைக்க வேண்டாம் எனவும் கண்டித்து இருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகளின் உறவினர்கள் மூத்த வழக்கறிஞர்களாக அல்லது நீதித்துறையில் பணியமர்த்தப்பட்ட பிரபல வழக்கறிஞர்களின் பட்டியலை வழக்கறிஞர் நெடும்பாரா சமர்ப்பித்தார்.
ஆனால் மனுவை தள்ளுபடி செய்வதாக கூறிய நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் எனக்கூறி நீதிமன்றங்கள் வழக்கறிஞர்களை வித்தியாசமாக கையாளுவதில்லை எனவும் கருத்து தெரிவித்தனர்.