‘14 நாட்களில் பார்வை பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு' என வைரலாகும் வீடியோ உண்மையா?
This news Fact checked by Vishvas News
பத்திரிக்கையாளர் ரஜத் ஷர்மா மற்றும் கண் சிகிச்சை நிபுணர் மருத்துவர் ரஹில் சவுத்ரி ஆகியோர் பங்கேற்ற வீடியோவில் 14 நாட்களில் பார்வை பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு என வீடியோ வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
AI-ஆல் உருவாக்கப்பட்ட அல்லது முக்கிய நபர்களின் Deep fake வீடியோக்கள் மூலம் மக்களை ஏமாற்ற சமூக ஊடகங்களில் பெரும்பாலும் முயற்சிகள் செய்யப்படுகின்றன. விஸ்வாஸ் நியூஸ் இது போன்ற பல போலி பதிவுகளை ஆய்வு செய்துள்ளது. இந்த எபிசோடில், இந்தியா டிவியின் தலைவரும், தலைமை ஆசிரியருமான ரஜத் சர்மா மற்றும் கண் மருத்துவர் ரஹில் சவுத்ரியின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதில் கண் பிரச்னைகளை குணப்படுத்தும் மருந்தை விளம்பரப்படுத்தி காட்டுகிறார்கள்.
விஸ்வாஸ் நியூஸ் தனது விசாரணையில் வைரலான வீடியோ போலியானது என்று கண்டறிந்தது. போலி வீடியோவில் ஆடியோ மாற்றப்பட்டுள்ளது. பத்திரிகையாளர் ரஜத் ஷர்மா மற்றும் கண் மருத்துவர் ரஹில் சவுத்ரி ஆகியோரும் சமூக ஊடகங்களில் இதுபோன்ற வீடியோக்கள் போலியானவை என்று கூறியுள்ளனர்.
'பெஸ்ட் ஹெல்த்' என்ற முகப்புத்தக பக்கத்தில் டிசம்பர் 5 அன்று வீடியோ வெளியிட்டு (காப்பக இணைப்பு), "நீங்கள் பார்வை பிரச்னைகளை நிரந்தரமாக அகற்ற விரும்புகிறீர்களா? இந்திய அரசின் இந்த மருத்துவத் திட்டத்தில் உடனடியாகப் பதிவு செய்து, 14 நாட்களில் உங்கள் பார்வையை மீண்டும் பெறுங்கள்!” என பதிவிடப்பட்டுள்ளது.
உண்மை சரிபார்ப்பு:
விஸ்வாஸ் நியூஸ் முதலில் வைரலான கூற்றை சரிபார்க்க வீடியோவை உன்னிப்பாகப் பார்த்து, உதடு அசைவுக்கும் ஆடியோவுக்கும் வித்தியாசம் இருப்பதை உறுதி செய்தது. மேலும், இது AI உருவாக்கியதாக சந்தேகம் எழுப்பப்பட்டது.
ட்ரூ மீடியாவின் AI கண்டறிதல் கருவியில் இந்த வீடியோவை இயக்கி சரிபார்க்கப்பட்டது. "முகங்கள்" மற்றும் "குரல்கள்" சிதைக்கப்பட்டதாக ட்ரூ மீடியா சந்தேகித்தது.
மேலும், முக்கிய வார்த்தைகள் கொண்டு தேடியபோது, டிச. 4 தேதியிட்ட ரஜத் ஷர்மாவின் ட்வீட் கிடைத்தது. அதில் அவர் இதுபோன்ற வீடியோக்களை போலி என்று குறிப்பிட்டு, “இந்த நாட்களில், போலி மருந்துகளை விற்கும் நபர்கள் என்னுடைய பல போலி வீடியோக்கள் வெளியிடுகிறார்கள். இவை டீப் பேக். இவர்கள் எனது வீடியோக்களை பயன்படுத்துகின்றனர். என்னுடையது போன்ற ஒரு குரலை வைக்க அவர்கள் AI ஐப் பயன்படுத்துகிறார்கள். அந்தக் குரல் என்னுடையது அல்ல. நான் எந்த மருந்தையும் விற்கவில்லை. நான் எந்த நீரிழிவு மருந்து, எடை இழப்பு மருந்து, முழங்கால் வலி மருந்து எதையும் விளம்பரப்படுத்தவில்லை. இந்த வீடியோக்கள் அனைத்தும் போலியானவை. அவர்களை நம்பாதீர்கள். நான் சைபர் கிரைம் பிரிவில் புகார் செய்தேன், போலீஸ் புகார்கள், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். ஒரு வீடியோ அகற்றப்பட்டால், மற்றொரு வீடியோ வரும். சில சமயம் அமிதாப் பச்சனுடன், சில சமயம் டாக்டர் நரேஷ் ட்ரெஹானுடன். இவை அனைத்தும் போலியானவை. அவற்றை வெளிப்படுத்த எனக்கு உங்கள் உதவி தேவை. இதுபோன்ற போலி வீடியோக்களை எங்காவது கண்டால் உடனடியாக 9350593505 என்ற எண்ணில் தெரிவிக்கவும்.” என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வீடியோவில் காணப்பட்ட கண் மருத்துவர் ரஹில் சவுத்ரியையும் தொடர்பு கொள்ளப்பட்டார். அவர், “இந்த வீடியோ ஒரு போலியானது. மோசடி செய்பவர்கள் என்னுடைய கிளிப்பை வேறொரு போட்காஸ்டில் இருந்து எடுத்து, அதில் தங்களின் சொந்த குரல் குறிப்பை வைத்து தங்கள் மருந்தை தவறாக விளம்பரப்படுத்தியுள்ளனர்” என தெரிவித்தார். அசல் போட்காஸ்டின் இணைப்பையும் பகிர்ந்துள்ளார். அசல் வீடியோ ரன்வீர் அலகபாடியா மற்றும் டாக்டர் ராஹிலின் போட்காஸ்டில் இருந்து எடுக்கப்பட்டது. வைரல் வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களை இந்த முழு போட்காஸ்டில் எங்கும் டாக்டர் சவுத்ரி கூறவில்லை.
விசாரணையின் முடிவில், 'பெஸ்ட் ஹெல்த்' என்ற பேஸ்புக் பயனரை சோஷியல் ஸ்கேன் செய்ததில், அந்த பயனரை 500க்கும் மேற்பட்டோர் பின்தொடர்வது கண்டறியப்பட்டது.
முடிவு:
விஸ்வாஸ் நியூஸ் தனது விசாரணையில் வைரலான வீடியோவில் குளறுபடி செய்யப்பட்டு, அதன் ஆடியோ மாற்றப்பட்டுள்ளது. பத்திரிக்கையாளர் ரஜத் ஷர்மா மற்றும் கண் சிகிச்சை நிபுணர் மருத்துவர் ரஹில் சவுத்ரி ஆகியோர் இந்த வீடியோ போலியானது என்று கூறியுள்ளனர்.
Note : This story was originally published by Vishvas News and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.