சிகிச்சைக்கு வந்த பெண்ணை பாலியல் ரீதியாக மருத்துவர் தொல்லை கொடுக்கும் வீடியோ சமீபத்தியதா? - உண்மை என்ன?
This News Fact Checked by ‘AajTak’
மருத்துவர் ஒரு பெண்ணை உடல் ரீதியாக துன்புறுத்தும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதில், மருத்துவர் ஒரு பெண்ணை பலகை போன்ற ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து, ஊசி போடுவதற்காக அவரது உடையை அகற்றுகிறார். அந்தப் பெண் அவரது கையை பிடித்து எதிர்ப்பு தெரிவிக்கிறார். ஆனால் மருத்துவர் அப்பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக ஊசி போடுகிறார். ஊசி போட்ட பிறகு, மருத்துவர் அந்தப் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்து கொள்கிறார்.
இந்த வீடியோவைப் பகிர்ந்தவர்கள் இந்த மருத்துவரைக் கைது செய்யக் கோருகின்றனர். இது சமீபத்தில் நடந்த சம்பவம் என்று பலர் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோவில் உடல் ரீதியான துஷ்பிரயோகம் தொடர்பான காட்சிகள் உள்ள காரணத்தினால்தான் அதைச் சேர்க்கவில்லை.
உண்மையை எப்படி கண்டுபிடித்தோம்?
வைரலான வீடியோவின் முக்கிய பிரேம்களைத் கூகுள் ரிவர்ஸ் இமேஜில் தேடியபோது, அக்டோபர் 2022 இல் நடந்த சம்பவம் தொடர்பான ஒரு YouTube வீடியோவைக் கண்டோம். உத்தரப்பிரதேசத்தின் கோண்டாவில், ஒரு பெண் காய்ச்சலுக்கு மருந்து வாங்க மருத்துவரிடம் சென்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், மருத்துவர் அந்தப் பெண்ணை தூங்க வைக்க ஊசி போட்டு, அவரை தகாத முறையில் நடந்து கொண்டு அதனை வீடியோவும் எடுத்துள்ளார். கோண்டா மாவட்டத்தின் கார்கு பூர் காவல் நிலையப் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
இதற்குப் பிறகு 2022 ஆம் ஆண்டில் இது குறித்து பல அறிக்கைகள் வெளியிடப்பட்டதைக் கண்டோம். கோண்டாவின் கார்கு பூர் பகுதியில் உள்ள விஷ்ணுபூர் சந்தையில் அஜ்மல் ஷேக் என்ற மருத்துவர் ஒரு தனியார் மருத்துவமனையை நடத்தி வந்தார். அக்டோபர் 25, 2022 அன்று, சிகிச்சை என்ற பெயரில், ஒரு பெண்ணுக்கு மயக்க ஊசி போட்டு, அவரை பாலியல் வன்கொடுமை செய்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டவரின் வீடியோவை சமூக ஊடகங்களில் வைரலாக்கினார்.
இந்த விவகாரம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண் தனது கணவருடன் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார். இதற்குப் பிறகு, அக்டோபர் 27, 2022 அன்று, குற்றம் சாட்டப்பட்ட மருத்துவரை போலீசார் கைது செய்தனர். போலீசார் அவரிடமிருந்து போதைப்பொருட்களை மீட்டனர், அதன் பிறகு அவரது மருத்துவமனை சீல் வைக்கப்பட்டது. வைரல் வீடியோவில் உள்ள பெண் மட்டுமல்லாது இந்த மருத்துவர் இதற்கு முன்பும் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக, அப்போதைய நகர காவல் அதிகாரியான லட்சுமிகாந்த் கௌதம், குற்றம் சாட்டப்பட்ட மருத்துவரை கைது செய்தது குறித்த தகவலை ஒரு வீடியோ மூலம் தெரிவித்திருந்தார். அதை கீழே காணலாம்.
உண்மை சரிபார்ப்பில் வைரல் வீடியோவில் அந்தப் பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் 2022 ஆம் ஆண்டிலேயே கைது செய்யப்பட்டுள்ளார் என்பது தெளிவாகிறது.
Note : This story was originally published by ‘AajTak’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.