அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போகிறதா #TVK மாநாடு?
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டின் தேதி மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் தொடங்கினார். 2026 சட்டமன்ற தேர்தல்தான் தனது இலக்கு என அறிவித்த விஜய், சமீபத்தில் தனது கட்சிக் கொடியையும், பாடலையும் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து கட்சியின் முதல் மாநாட்டிற்கான வேலைபாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மாநாடு நடத்த அனுமதி அளிப்பதற்கு முன்னதாக, மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்து 21 கேள்விகளை காவல்துறை தவெக கட்சியினர் முன்வைத்தனர். இந்த கேள்விகளுக்கு கடந்த 6ம் தேதி விஜய் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.
இதனிடையே, காவல்துறை தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும், அதன்படி இந்த மாநாடு ஏற்கனவே அறிவித்த செப். 23-ம் தேதியில் மாற்றம் இன்றி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகின. இந்த சூழலில், மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் அதே நேரத்தில் செப்டம்பர் 23 ஆம் தேதி என்பது குறுகிய காலமாக இருப்பதால் மாநாட்டை உரிய தேதியில் நடத்த முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில், அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் மாநாடை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் இல்லையெனில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தான் மாநாடு நடத்த போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடைபெற உள்ள இடத்தின் கால அவகாசத்தை நீடிப்பது தொடர்பாகவும் இடத்தின் உரிமையாளரிடம் பேசப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.திமுக மேலிடம் சார்பில் நெருக்கடிகளை கொடுக்க வேண்டாம் என உத்தரவு வழங்கியிருந்தாலும் மாநாட்டிற்கு பல வகைகளில் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருவதாகவும் மாவட்டச் செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : UPI பரிவர்த்தனை: நாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விதி! என்னென்ன தெரியுமா?
மாவட்டங்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை ஏற்றுவதில் திமுகவினர் நெருக்கடி கொடுப்பதாக நிர்வாகிகள் குற்றசாட்டு, மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களிலேயே கொடிக்கம்பம் நடுவதற்கு அனுமதி வழங்குவதாகவும் கூறுகின்றனர். மாநாட்டிற்கு அடையாள அட்டை வழங்குவது, உறுப்பினர்களை அழைத்து வர வாகனங்களை தேர்வு செய்வது, உறுப்பினர்களை சேர்ப்பது என மாவட்டச் செயலாளர்களுக்கு வேலைகள் இருப்பதால் இந்த ஆண்டு மாநாடு நடைபெறுவதற்கு வாய்ப்புகள் குறைவாக உள்ளதாகவே தகவல் தெரிவிக்கப்படுகிறது.