திடீர் உயிரிழப்புகளுக்கு கொரோனா தடுப்பூசிதான் காரணமா? - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்!
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் கடந்த 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பல உயிர்களை பறித்துச் சென்றது. ஊரடங்கு, தடுப்பூசி உள்ளிட்ட நடவடிக்கைகளால் கொரோனா தொற்று பரவல் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதற்கிடையே, கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு உடல்நலப் பிரச்னை ஏற்பட்டு வருவதாக தகவல் பரவியது. மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட இளைஞர்கள் திடீரென உயிரிழப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த தகவல் மக்கள் மத்தில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.
இதையும் படியுங்கள் : “ஒரே வரியில் ‘சாரி’ என்று சொல்வது எந்த வகையில் நியாயம்?” – நயினார் நாகேந்திரன் கேள்வி
இந்த நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. இந்த குற்றச்சாட்டு குறித்து ஐ.சி.எம்.ஆர் மற்றும் எய்ம்ஸ் நிபுணர்கள் தீவிர ஆய்வு மேற் கொண்டனர். இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
"இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை. கொரோனா தடுப்பூசிக்கும் உயிரிழப்புகளுக்கும் தொடர்பு இல்லை. அதேசமயம், ஏற்கனவே இருக்கக்கூடிய அடிப்படை உடல்நலப் பிரச்னைகள், மரபணு பிரச்னைகள், ஆபத்தான வாழ்க்கை முறை தேர்வுகள் ஆகியவை விவரிக்கப்படாத திடீர் உயிரிழப்புகளுக்கு பங்கு வகிக்கின்றன. கொரோனா தடுப்பூசி தான் திடீர் உயிரிழப்புகளுக்கு காரணம் என்ற கூற்று தவறானது. அந்த வாதம் தவறாக வழிநடத்தும் செயல். இதுபோன்ற தகவல்கள் தொற்றுநோய்களின் போது மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றுவதில் முக்கிய பங்கு வகித்த தடுப்பூசிகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அபாயம் உள்ளது. இத்தகைய ஆதாரமற்ற அறிக்கைகள் மற்றும் கூற்றுக்கள் நாட்டில் தடுப்பூசி தயக்கத்திற்கு வலுவாக பங்களிக்கக்கூடும், இதனால் பொது சுகாதாரம் மோசமாக பாதிக்கப்படும்"
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.