IC 814 கந்தஹார் விமானக் கடத்தல் தொடர்பான பதிவுகளை #ModiGovt அழிக்க முயற்சிக்கிறதா?
ஐசி 814 - கந்தஹார் விமானக் கடத்தல் தொடர்பான பதிவுகளை மோடி அரசு அழிக்க முயற்சித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
1999 டிசம்பரில், ஐசி 814 என்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் காத்மாண்டுவிலிருந்து டெல்லிக்கு செல்லும் வழியில், 5 தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது. இந்த கடத்தல் 8 நாட்கள் நீடித்தது. பயணிகளின் உயிரை காப்பாற்ற வாஜ்பாய் தலைமையிலான இந்திய அரசு 3 பயங்கரவாதிகளை விடுவிக்க வேண்டிய கடினமான முடிவை எடுத்தது. அந்த நேரத்தில் உளவுத்துறை தலைவராக இருந்த அஜித் தோவல் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங் இருவரும் இந்த நிகழ்வில் முக்கிய பங்கு வகித்தனர்.
இந்த உண்மைக் கதையை அடிப்படையாக கொண்டு பாலிவுட்டில் ஐசி 814 - தி கந்தஹார் ஹைஜாக் எனும் வெப் சீரீஸ் எடுக்கப்பட்டுள்ளது இது 6 எபிசோடுகளை கொண்டுள்ளது. இந்த வெப்சீரிஸ் பிரபல ஒடிடி தளமான நெட்ஃபிளிக்ஸில் வெளியானது. இதனைத் தொடர்ந்து இந்த தொடரின் திரைக்கதை அரசியல் வட்டாரத்தில் மீண்டும் கந்தஹார் விமானக் கடத்தல் தொடர்பான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கந்தஹார் விமான கடத்தல் தொடர்பான இந்த வெப் சீரீஸில் அப்போதைய அரசின் தயார் நிலை குறைபாடு, நிர்வாகத் துறையில் ஏற்பட்ட பல்வேறு தவறுகள் மற்றும் பயணிகளை விடுவிப்பதற்காக தீவிரவாதிகளுடன் நடத்தப்பட்ட நீண்ட பேச்சுவார்த்தை ஆகியவை முக்கியமாக இந்த தொடரில் இடம்பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து வெப்சீரிஸில் பயன்படுத்தப்பட்டுள்ள தீவிரவாதிகளின் பெயர்கள் தவறாக இந்து மதத்தை சார்ந்தவர்களின் பெயர்களாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறி மத்திய அரசு நெட்ஃபிளிக்ஸிற்கு சம்மன் அனுப்பியது. இந்த நிலையில் இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
காந்தஹாரில் விமானக் கடத்தல் விவகாரத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அடிபணிந்தது என அப்போதைய வாஜ்பாய் அரசை காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சிகள் விமர்சனம் செய்தன. இந்த நிலையில் கந்தஹார் விமானக் கடத்தல் தொடர்பான பதிவுகளை தற்போதைய மோடி அரசு மறைத்து வருவதாகவும், அதனை அழிக்க முயற்சி செய்வதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.