Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“வெள்ளத்தில் மிதந்த போது வராத பிரதமர் ஓட்டு கேட்டு மட்டும் வருவது நியாயமாக இருக்கிறதா?” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

10:29 PM Mar 14, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்த போது வராத பிரதமர் ஓட்டு கேட்டு மட்டும் வருவது நியாயமாக இருக்கிறதா என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வினவியுள்ளார். 

Advertisement

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (14.03.2024) சென்னை, தங்கசாலையில் ரூ. 4,181 கோடியில் வடசென்னை வளர்ச்சித் திட்ட விரிவாக்கப் பணிகளைத் தொடங்கி வைத்துப் பேருரையாற்றினார்.

அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

"நம்முடைய அரசு, இப்படி சென்னையை உயர்த்த நாள்தோறும் புதிய புதிய திட்டங்களாக நிறைவேற்றுகிறது. ஆனால், கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் சென்னை எப்படி வெள்ளத்தில் முழ்கியது? சென்னை மட்டுமா! ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நிதிநிலைமையும் மூழ்கடித்துவிட்டு சென்றார்கள். அவர்களைப் போன்று தான் 10 ஆண்டு கால பா.ஜ.க ஆட்சியும் சென்னைக்கு எதுவும் செய்யவில்லை. தமிழ்நாட்டிற்கும் ஒன்றும் செய்யவில்லை. ஆனால், நாளைக்கு பிரதமர் மோடி கன்னியாகுமரி வரப்போகிறார். எதற்காக வரப் போகிறார்? தமிழ்நாட்டிற்கான சிறப்புத் திட்டங்களை உருவாக்கித் தர வரப் போகிறாறா? இல்லை, ஓட்டு கேட்டு வரப் போகிறார். ஓட்டு கேட்டு வருவதை நான் தவறு என்று சொல்ல விரும்பவில்லை. சென்னை வெள்ளத்தில் மிதந்த போது, மக்களுக்கு ஆறுதல் கூற வராத பிரதமர், தூத்துக்குடியும், கன்னியாகுமரியும் வெள்ளத்தில் மிதந்த போது மக்களைப் பார்க்க வராத பிரதமர், ஓட்டு கேட்டு மட்டும் வருவது நியாயமாக இருக்கிறதா?

குஜராத் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது, அன்றைய தினமே ஹெலிகாப்டரில் சென்று பார்த்தாரே! மறுநாளே, நிவாரண நிதி கொடுத்தாரே! குஜராத்திற்கு ஏன் கொடுத்தீர்கள் என்று நான் கேட்கவில்லை. தமிழ்நாட்டுக்கு ஏன் தரவில்லை என்று தான் கேட்கிறேன்.குஜராத்துக்கு அன்றைய தினமே நிதி தருவதும், தமிழ்நாட்டிற்கு மூன்று மாதம் சென்ற பிறகும் நிதி தர மனதில்லாமல் போவதும் ஏன்? இதை கேட்டால், நம்மை பிரிவினைவாதி என்று அடையாளம் காட்டுகிறார்கள். நம்மை பிரிவினைவாதி போல் பேசுகிறார்கள். அது மட்டுமா! சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணி! நாம் ஆட்சிக்கு வந்த உடனே, பிரதமரை நான் முதல் முறையாக பார்க்கச் சென்றபோது, மெட்ரோ பணிக்கு நிதி கேட்டேன். இப்போது, 3 வருடம் ஆகிறது, என்ன நிலைமை? நமக்கு அடுத்து கேட்ட மாநிலங்களுக்கு வழங்குகிறார்கள். ஆனால், நமக்கு ஒன்றும் வரவில்லை! தரவில்லை!

நாம் கேட்டுக் கொண்டே இருப்பது என்ன? மத்திய அரசுக்கு அதிக வரி வருவாய் எங்கிருந்து போகிறது? நம்முடைய தமிழ்நாட்டில் இருந்து போகிறது. நம்முடைய பணம் தான் போகிறது. ஆனால், அதற்கேற்ற மாதிரி திருப்பி தருகிறார்களா? நாம் ஒரு ரூபாய் கொடுத்தால், 28 பைசா தான் மறுபடியும் நமக்கு வருகிறது! அதையாவது ஒழுங்காக கொடுக்கிறார்களா? இல்லை! நிதி கேட்டு கடிதம் எழுதுகிறோம்! நம்முடைய எம்.பி.க்கள் எல்லாம், நிதி கொடுங்கள் என்று நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கிறார்கள். அதற்கு பிறகு தான் அந்த 28 பைசாவையும் கொடுக்கிறார்கள். இதை சொன்னால் நாம் பிரிவினை பேசுகிறோமா! பிரதமர் மோடி அவர்களே! பிரிவினை எண்ணம் எங்களுக்கு இல்லை. ஒரு கண்ணில் வெண்ணெய்யும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் ஏன் என்று தான் கேட்கிறோம்." என்று தெரிவித்தார்.

Tags :
DMKMK Stalinnews7 tamilNews7 Tamil UpdatesPM ModiTamilNadu
Advertisement
Next Article