பரந்தூர் மக்களை #Vijay சந்திப்பதால் திமுகவுக்கு நெருக்கடியா? ஆர்.எஸ்.பாரதி விளக்கம்
காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் ஏகனாபுரம் பகுதியில் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 900 நாட்களுக்கும் மேலாக ஏகானாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் தமிழக வெற்றில் கழக தலைவர் விஜய், தனது கட்சியின் முதல் மாநாட்டில் பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, விவசாய நிலங்களை கையகப்படுத்த கூடாது என தீர்மானமும் நிறைவேற்றினார்.
மேலும், பரந்தூர் கிராம மக்களை சந்திக்க விஜய் முடிவு செய்தார். அதற்காக, தமிழக டி.ஜி.பி. மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் அனுமதி கோரப்பட்டது. அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து தவெக தலைவர் விஜய் இன்று (ஜன.20) பரந்தூர் கிராம மக்களை சந்திக்க உள்ளார். இந்த சூழலில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பரந்தூர் மக்களை தவெக தலைவர் விஜய் சந்திப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், "பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது ஏன்? அவசியமானது என அமைச்சர் தங்கம் தென்னரசு மிக தெளிவாக தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், தவெக தலைவர் விஜய் பரந்தூர் மக்களை சந்திப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை எனவும் அவர் கூறினார். யார் யாரை பார்த்தாலும் எங்களுக்கு பிரச்னையும் கிடையாது. எங்களுக்கு மக்களும், நாட்டின் வளர்ச்சியும்தான் முக்கியம். திமுகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் எந்த திட்டம் வகுத்தாலும் அது தொலைநோக்கு பார்வையுடன்தான் இருக்கும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "திமுக அரசு பட்டியலின மக்களுக்கான அரசு. இந்தியாவிலேயே பட்டியலின மக்கள் அதிகமாக படித்துள்ளது தமிழ்நாட்டில்தான். நாடாளுமன்ற தேர்தலில் பட்டியலின மக்கள் திமுகவிற்கு தான் வாக்களித்தனர். இதை திசை திருப்ப பலரும் முயற்சிக்கின்றனர்" என்று தெரிவித்தார்.