பெயர், பாலினத்தை மாற்றிய IRS அதிகாரி - மத்திய அரசு அனுமதி!
ஹைதராபாத்தில் பணிபுரியும் ஐ.ஆர்.எஸ் அதிகாரி தனது பாலினம் மற்றும் பெயரை மாற்றியுள்ளார்.
கல்வி பயிலும் மாணவர்கள் தங்களது பெயர் மற்றும் பிறந்த தேதி குறித்து ஏதேனும் மாற்றம் செய்ய விரும்பினால் பத்தாம் வகுப்பு படிக்கும் போது மாற்றிக் கொள்வது வழக்கம். இதே போல ஹார்மோன் மாற்றங்களால் திருநங்கை அல்லது திருநம்பிகளாக மாறிய நபர்கள் ஆண் / பெண் பாலினம் அல்லாமல் மாற்றுப் பாலினம் எனு பிரிவில் தங்களது ஆவணங்களில் மாற்றம் செய்து கொள்கின்றனர்.
ஹைதராபாத்தில் பணியமர்த்தப்பட்ட மூத்த ஐ.ஆர்.எஸ் அதிகாரி தனது அனைத்து அதிகாரப்பூர்வ ஆவணங்களிலும் பெயர் மற்றும் பாலினத்தை மாற்றிக் கொள்ள அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தார். இதன் மூலம் எம் அனுசுயா எனும் தனது பெயரை எம் அனுகதிர் சூர்யா என்றும், பாலினத்தை பெண்ணிலிருந்து ஆணாகவும் மாற்றக் கோரி மேல்முறையீடு செய்திருந்த நிலையில் இதற்கு மத்திய நிதியமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
இவர் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். இதன் பின்னர் தனது முதுகலை பட்டத்தை போபாலில் உள்ள தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் சைபர் சட்டம் மற்றும் சைபர் தடயவியல் துறையில் பயின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.