ஈரான் vs இஸ்ரேல் தாக்குதல் | " #3rdWorldWarன் விளிம்பில் உலகம் உள்ளது" - டொனால்ட் ட்ரம்ப் கருத்து!
ஈரான் இஸ்ரேல் தாக்குதலின் மூலம் உலகம் மூன்றாவது உலகப் போரின் விளிம்பில் உள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளது.
ஹமாஸ், ஹிஸ்புல்லா தலைவர்கள் மற்றும் ஈரானின் ராணுவ அதிகாரிகளின் கொலைக்கு பழிவாங்கும் விதமாக நேற்று இரவு இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. 400க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஈரான் வீசியதாக தகவல் வெளியானது.
காஸா, லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஈரான் பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்கா எச்சரித்திருந்தது. இந்த நிலையில்தான் ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது.
இந்த தாக்குதலை தொடர்ந்து ஜெருசலேம் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு இஸ்ரேல் அரசு உத்தரவிட்டது. இதனிடையே இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் அரசு ஊடகமும் அதிகாரபூர்வமாக தெரிவித்தது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் பகுதியிலும் தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஈரான் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த அமெரிக்க ராணுவத்திற்கு அதிபர் பைடன் உத்தரவிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரும் அமெரிக்க முன்னாள் அதிபருமான டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாவது..
“ இஸ்ரேலை நோக்கி ஈரான் நூற்றுக் கணக்கான ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. இதன் மூலம் உலகம் மூன்றாம் உலகப் போருக்கான விளிம்பு நிலையில் உள்ளது. இதுபற்றி கண்டுகொள்ளாமல் அமெரிக்க அதிபர் ஜோபைடனும் ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளருமான கமலா ஹாரிஸ் தேர்தல் பிரசாரத்தில் படுபிஸியாக உள்ளனர்” என ட்ரம்ப் தெரிவித்தார்.