#Iran | உச்சநீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு - 2 நீதிபதிகள் உயிரிழப்பு!
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அந்நாட்டு உச்சநீதிமன்றம் உள்ளது. உச்சநீதிமன்றத்தில் முகமது மொஹிசா மற்றும் அலி ரசானி ஆகியோர் நீதிபதிகளாக செயல்பட்டு வந்தனர். இரு நீதிபதிகளும் இன்று (ஜன.18) உச்சநீதிமன்ற வளாகத்தில் உள்ள ஓய்வு அறையில் இருந்தனர். அப்போது, அங்கு துப்பாக்கியுடன் மர்ம நபர் ஒருவர் புகுந்தார். அந்த நபர் நீதிபதிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
இந்த துப்பாக்கி சூட்டில் நீதிபதிகள் மொஹிசா, அலி ரசானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இந்த தாக்குதலில் நீதிபதிகளின் பாதுகாவலரும் படுகாயமடைந்தார். இதனை தொடர்ந்து துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய நபரும் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.
சுட்டுக்கொல்லப்பட்ட நீதிபதிகள் இருவரும் தீவிர அடிப்படைவாத கொள்கைகளை கொண்டவர்கள் என்றும், சமூக ஆர்வலர்கள், போராட்டங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான தண்டனைகளை கொடுப்பவர்கள் என்றும் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக ஈரான் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். உச்சநீதமன்ற வளாகத்தில் 2 நீதிபதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.