மீண்டும் தொடங்கும் ஐபிஎல்... புதிய அட்டவணை வெளியீடு - இறுதிப்போட்டி எப்போது?
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் தொடரின் 18வது சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதுவரை 59 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், சென்னை, ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் ப்ளே ஆஃப் வாய்ப்பினை இழந்துள்ளன. இன்னும் 12 லீக் போட்டிகள் மற்றும் 4 பிளே ஆஃப் சுற்று போட்டிகள் மட்டுமே நடத்தப்பட உள்ளது.
இதற்கிடையே, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 7ம்தேதி நள்ளிரவு 1.44 மணியளவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. மொத்தம் 9 இடங்களில் (சகாம்ரு, முரித்கி, கோட்லி, சியால்கோட், குல்பூர், பிம்பர், பஹவல்பூர்) பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வந்தது. இதனால் எல்லையில் போர் பதற்றம் நிலவியது.
தொடர்ந்து, கடந்த 8ம் தேதி நடைபெற்ற தாக்குதல் காரணமாக தர்மசாலாவில் நடைபெற்ற 58வது ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர் வீரர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் ஐபிஎல் போட்டிகளை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைப்பதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது.
இந்த நிலையில், தாக்குதல்கள் தணிந்ததை அடுத்து ஒத்திவைக்கப்பட்ட ஐபில் தொடர் வரும் 17ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. அன்றைய தினம் பெங்களூரு - கொல்கத்தா அணிகள் பெங்களூருவில் மோதுகின்றன.
13 லீக் ஆட்டங்கள் மற்றும் இறுதிப்போட்டி உள்பட 4 பிளே-ஆப் சுற்று என மொத்தம் 17 ஆட்டங்கள் நடத்தப்படுகிறது. பாதியில் ரத்தான பஞ்சாப்- டெல்லி இடையிலான லீக் ஆட்டம் மீண்டும் நடத்தப்பட உள்ளது. எஞ்சிய ஆட்டங்கள் பெங்களூரு, ஜெய்ப்பூர், டெல்லி, லக்னோ, மும்பை, ஆமதாபாத் ஆகிய 6 இடங்களில் நடைபெறுகிறது. சென்னையில் நடைபெற இருந்த சென்னை - ராஜஸ்தான் இடையிலான ஆட்டம் டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மே 29-ம் தேதி இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றும், மே 30-ம் தேதி வெளியேற்றுதல் சுற்றும், ஜூன் 1ம் தேதி இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றும், ஜூன் 3-ம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெறுகிறது.