#IPL2025 | அடுத்த மாத இறுதியில் ஐபிஎல் மெகா ஏலம்?
ஐபிஎல் 2025-ஆம் ஆண்டுக்கான மெகா ஏலம் நடைபெறும் இடம், தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் கடைசி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏலத்துக்கு முன்பாக ஒவ்வொரு அணியும் 6 வீரர்கள் வரை தக்க வைத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
துபாய், சிங்கப்பூர், லண்டன் உள்ளிட்ட நகரங்களில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தை நடத்துவது குறித்து பிசிசிஐ ஆய்வு செய்தது. இந்நிலையில், ஐபிஎல் 2025-ஆம் ஆண்டுக்கான மெகா ஏலம் நடைபெறும் இடம், தேதி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.செளதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு நடைபெறும் இடத்தை பிசிசிஐ அதிகாரிகள் சிலர் இன்று நேரில் ஆய்வு செய்வதற்காக ரியாத்துக்கு செல்லவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள் : SIR படத்தின் முதல் 6 நிமிட காட்சி வெளியீடு!
ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகளின் நிர்வாகத்தினர், தங்கள் அணியில் தக்க வைத்துக் கொள்ள விரும்பும் வீரர்களின் பட்டியலை அக்டோபர் 31 மாலை 5 மணிக்குள் தெரிவிக்குமாறு பிசிசிஐ காலக்கெடு விதித்துள்ளது. இதையடுத்து, நவம்பர் 24 மற்றும் 25-ஆம் தேதிகளில் மெகா ஏலம் நடத்துவதற்கு பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏலத்தில் பங்கேற்கவுள்ள அணிகளின் குழுக்களுக்கு பயணத் திட்டம் மேற்கொள்ள வேண்டியுள்ளதால், விரைவில் தேதியையும் இடத்தையும் தெரிவிக்குமாறு அணி நிர்வாகத்தினர் பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்து வரும் நிலையில், ஓரிரு நாள்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.