ஐபிஎல் | மும்பையை வீழ்த்தி குஜராத் அணி அபார வெற்றி!
அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த 18வது ஐபிஎல் தொடர் கடந்த 22ம் தேதி கோலகலமாக தொடங்கியது. இந்த தொடரில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (மார்ச் 29) நடைபெற்ற 9வது லீக் போட்டியில் குஜராத் - மும்பை அணிகள் மோதிக்கொண்டன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. குஜராத் அணியின் வீரர்கள் நிலைத்து ஆடி ரன்களை குவித்தனர்.
இறுதியில் குஜராத் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது. குஜராத் அணி தரப்பில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 63 ரன்கள் எடுத்தார். மும்பை தரப்பில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 197 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே மும்பை அணியின் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர்.
இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 36 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி குஜராத் அணி அபார வெற்றி பெற்றது. மும்பை அணி தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 48 ரன்கள் எடுத்தார். குஜராத் அணியின் பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.