ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி - நடப்பு தொடரிலிருந்து வெளியேறிய RCB அணி.!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிபெற்றது.
கடந்த மாதம் 22-ம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரின் 17-வது சீசன், அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில், 70 லீக் போட்டிகளின் முடிவில் 6 அணிகள் தொடரில் இருந்து வெளியேறின. இந்நிலையில், நேற்றுமுன் தினம் (மே 21) முதல் ப்ளே ஆஃப் சுற்று போட்டிகள் நடைபெற்றது.
இதில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதின. ஆட்டத்தின் இறுதியில், 13.2 ஓவர்களில் இலக்கை கடந்து, 164 ரன்களை விளாசி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் முதல் அணியாக நுழைந்தது.
இதையடுத்து, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் புள்ளிபட்டியலில் 3-வது இடம் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், 4-வது இடம் பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அந்த வகையில் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் டுபிளிசிஸ் களமிறங்கினர். டுபிளிசிஸ் 17 ரன்களில் அவுட் ஆனார். அதை தொடர்ந்து விராட் கோலி 33 ரன்னிலும் க்ரீன் 27 ரன்னிலும் வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய மேக்ஸ்வெல் கோல்டன் டக் அவுட் ஆனார்.
இதையும் படியுங்கள் : மஞ்சும்மல் பாய்ஸ் பட நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ்!
அதிரடியான ஆட்டத்தை தொடங்கிய சில நிமிடங்களில் பட்டிதார் 34 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து இறங்கிய தினேஷ் கார்த்திக் 11 ரன்களில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய மஹிபால் லோமரோர் 17 பந்தில் 32 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து, 20 ஓவர் முடிவில் ஆர்சிபி அணி 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் ஆவேஷ் கான் 3 விக்கெட்டும் அஸ்வின் 2 விக்கெட்டும் எடுத்தனர். அந்த வகையில், ராஜஸ்தான் அணிக்கு 173 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் யஷஷ்வி ஜெய்ஸ்வாலும், டம் கோலர் கட்மோரும் சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். ஜெய்ஸ்வால் 30 பந்துகளுக்கு 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். டம் கோலர் கட்மோரும் 20 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், சர்மாவின் பந்தில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். அதன்பின் வந்த ரியான் பராக் 36 ரன்கள் குவித்து அவுட்டானார். அடுத்து வந்த ஜூரெல் 8 ரன்கள் எடுத்தபோது ரன் அவுட் ஆனார். பின் களமிறங்கிய ஹெட்மெயர் 14 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து அவுட்டானார். தொடர்ந்து, ரோவ்மன் பவுலும், அஸ்வினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இவர் 16 ரன்கள் எடுத்தபோது அணி, வென்றது. இறுதியாக 19வது ஓவர்களில் வெற்றி இலக்கைத் தாண்டி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.