ஐபிஎல் | கான்வே போராட்டம் வீண்... சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி!
18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. அதன்படி, முல்லான்பூரில் நேற்று நடைபெற்ற 22வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் - சென்னை அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய பஞ்சாப் அணியின் வீரர்கள் ரன்களை அள்ளிக் குவித்தனர். பஞ்சாப் வீரர்களை வெளியேற்ற சென்னை அணி தீவிரமாக முயற்சித்தனர். இருப்பினும், சென்னை அணிக்கு அது சவாலாகவே அமைந்தது.
இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் குவித்தது. பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக பிரியான்ஷ் ஆர்யா 103 ரன்கள் அடித்தார். சென்னை தரப்பில் அஸ்வின் மற்றும் கலீல் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனையடுத்து 220 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரச்சின் ரவீந்திரா மற்றும் கான்வே ஆகியோர் களமிறங்கினர். இதில் ரவீந்திரா 36 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய கேப்டன் கெய்க்வாட் 1 ரன்னில் வெளியேறினார். இவரைத் தொடர்ந்து இறங்கிய சிவம் துபே, கான்வேயுடன் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ஆடிய இந்த ஜோடி ரன்களை வாரி குவித்தது. கான்வே 37 பந்துகளில் தனது அரை சதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் ஆடிய சிவம் துபே 42 ரன்களில் வெளியேறு சென்னை அணி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அடுத்ததாக கான்வேயுடன், தோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் கான்வே, 69 ரன்களில் அமர வைக்கப்பட்ட நிலையில், ஜடேஜா களமிறக்கினார்.
தொடர்ந்து ஜோடி சேர்ந்த ஜடேஜா, தோனி இணை வேகமாக ரன்களை சேர்க்க போராடினர். இதில் தோனி 27 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றிபெற்றது. சென்னை அணையின் விஜய் சங்கர் 2 ரன்னும், ஜடேஜா 9 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். பஞ்சாப் அணியின் சார்பில் பர்குசன் 2 விக்கெட்டுகளும், மேக்ஸ்வெல் மற்றும் யாஸ் தாக்கூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.