ஐபிஎல் 2024 : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற 65வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தனது வெற்றியை பதிவு செய்தது.
2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி பல்வேறு மைதானங்களில் நடைபெற்று வருகிறது. இதுவரை 65 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா அணி முதலாக முன்னேறியது. அதனையடுத்து ராஜஸ்தான் அணி முன்னேறியது. பஞ்சாப், குஜராத், மும்பை அணிகள் அதற்கான தகுதியினை இழந்தன.
இந்நிலையில் மீதமுள்ள சென்னை, பெங்களூரு, லக்னோ, டெல்லி, ஹைதராபாத் அணிகளில், எந்த இரண்டு அணிகள் ப்ளே ஆஃப்க்கு தகுதிபெறும் என்ற எதிர்பார்ப்புகளுடன் ஐபிஎல் லீக் போட்டிகள் தீவிரமாக சென்று கொண்டிருக்கிறது.
ஐபிஎல் லீக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், நேற்று (மே 15) நடைபெற்ற 65 லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்க்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவுகளில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்களை குவித்துள்ளது. இதன்மூலம் 145 ரன்களை பஞ்சாப் அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இதையும் படியுங்கள் : சவுக்கு சங்கரை பெண் காவலர்கள் தாக்கியதாக அவரது வழக்கறிஞர் குற்றச்சாட்டு!
இதனையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக பேர்ஸ்டோ- பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். பிரப்சிம்ரன் சிங் 4 ரன்னில் வெளியேறினார். பேர்ஸ்டோ 22 பந்துகளில் 14 ரன்கள் மட்டும் எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த ஷசாங் சிங் டக் அவுட் ஆனார். தொடர்ந்து, ரிலீ ரோசோவ் 22 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்நிலையில், கேப்டன் சாம் கரன் மற்றும் ஜித்தேஷ் சர்மா இணைந்து விளையாடினர். ரன்களை சேர்த்தனர். ஜித்தேஷ் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். சாம் கரன் அரை சதம் அடித்து அசத்தினார். அசுதோஷ் சர்மா மற்றும் சாம் கரன் இறுதி வரை சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர். இறுதியில், பஞ்சாப் அணி 18.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்கள் விளாசியது.