ஐபிஎல் 2024 தொடரின் CSK vs RCB அணிகளுக்கு இடையிலான முதல் ஆட்டத்தின் டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்!
சென்னையில் நடைபெற உள்ள ஐபிஎல் 2024 தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான முதல் ஆட்டத்தின் டிக்கெட் விற்பனை நாளை ஆன்லைனில் தொடங்குகிறது.
ஐபிஎல் போட்டிகள் வரும் 22 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளன. இந்த போட்டியில் தலா ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே (சென்னை), எம்ஐ (மும்பை) அணிகளுடன் மேலும் 8 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்நிலையில், இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை (மார்ச் 18) தொடங்கும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : துப்பறிவாளன் 2 படத்தின் அப்டேட்! -இயக்குநராக மாறி விஷால்?
இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் கூறியதாவது :
"டிக்கெட்டுகள் அனைத்தும் இணையவழியில் மட்டுமே விற்பனை செய்யப்படும். டிக்கெட்டுகளை பே டிஎம் மற்றும் இன்சைடர் இணைய தளத்தில் ரசிகர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம். முன்பதிவு காலை 9.30 மணிக்கு தொடங்கும். ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, ஒரு நபரால் இரண்டு டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டியை மைதானத்தின் கேலரியில், சி, டி, இ ஆகிய கேலரிகளின் லோயர் பகுதியில் இருந்து காண ரூபாய் 1700 கட்டணம், சி, டி, இ ஆகிய கேலரிகளின் மேற்பகுதியில் இருந்து போட்டியைக் காண ரூபாய் 4 ஆயிரம் கட்டணம், ஐ, ஜே, கே கேலரிகளின் கீழ் பகுதியில் இருந்து போட்டியைக் காண விரும்புபவர்களுக்கு ரூ.4500 கட்டணம், கேலரியின் மேற்பகுதியில் இருந்து போட்டியைக் காண ரூ.4000 கட்டணம், மேலும் கலைஞர் கருணாநிதி கேலரியில் இருந்து போட்டியைக் காண ரூ.7,500 கட்டணமாக நிர்ணயம். மேலும் போட்டி நாளன்று மாலை 4.30 மணிக்கு பார்வையாளர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். செல்லப்பிராணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது"
இவ்வாறு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.