ஐபிஎல் 2024: சென்னை-ஹைதராபாத் இன்று மோதல்!
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதிராபாத் இடையிலான இன்றைய ஐபிஎல் போட்டி இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது.
கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவாக கொண்டாடப்படும் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்ந்து வருகிறது. டி20 போட்டியா அல்லது ஒருநாள் போட்டியா என எண்ணும் அளவுக்கு ரன்கள் குவிக்கப்பட்டு சாதனை மேல் சாதனை படைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இன்று நடக்கும் 18வது ஆட்டத்தில் சென்னை அணியும், ஹைதராபாத் அணியும் மோதுகின்றது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இப்போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் கடைசியாக விளையாடிய போட்டியில் சென்னை அணி டெல்லியிடமும், ஹைதராபாத் அணி குஜராத் அணியிடமும் தோற்றுள்ளது. இரு அணிகளும் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப முயற்சிக்கும்.
சென்னை அணியின் நட்சத்திர வீரர் தோனியின் கடைசி தொடராக இந்தாண்டு ஐபிஎல் தொடர் பார்க்கப்படுகிறது. இதனால் சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. ஏற்கனவே சென்னை எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் இரண்டு போட்டிகள் நடைபெற்ற நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் மூன்றாவது போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை குறித்து சென்னை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வரும் 8-ம் தேதி சிஎஸ்கே - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றன.இந்த ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை இன்று (05.04.2024) காலை 9.30 மணிக்கு ஆன்லைனில் தொடங்கும் என சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.அதன்படி Paytm மற்றும் www.insider.in என்ற இணையதளத்தை மட்டுமே பயன்படுத்தி டிக்கெட் பதிவு செய்து கொள்ளலாம் என கிரிக்கெட் ரசிகர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் ஒரு நபருக்கு இரண்டு டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது போட்டிக்கான டிக்கெட் விலை விவரங்களையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. சி, டி, இ கீழ் ஸ்டாண்டுகளின் டிக்கெட் விலை ரூ.1,700 எனவும் ஐ, ஜே, கே மேல் ஸ்டாண்டுகளின் டிக்கெட் விலை ரூ.2,500 ஆயிரம் எனவும் ஐ, ஜே, கே கீழ் ஸ்டாண்டுகளின் டிக்கெட் விலை ரூ.4 ஆயிரம் எனவும் சி,டி,இ மேல் ஸ்டாண்டுகளின் டிக்கெட் விலை ரூ.3,500 ஆயிரம் எனவும், கேஎம்கே டெரஸ் டிக்கெட் விலை ரூ.6 ஆயிரம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் டிக்கெட் பதிவு செய்பவர்கள் எந்த நுழைவுவாயில் வழியாக வர வேண்டும் என்பது குறித்தும், வாகனங்களை எங்கு நிறுத்த வேண்டும் என்பதும் குறித்தும், அதற்கான வழிமுறைகளையும் தெரிவித்துள்ளனர். வரும் திங்கட்கிழமை புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள கொல்கத்தா அணியுடன் சென்னை அணி மோதவுள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.