Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“ஸ்பெயின் நாட்டிலும் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி ஐரோப்பிய நாடுகளில் இருந்து முதலீடு ஈர்க்கப்படும்!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

09:50 PM Jan 27, 2024 IST | Web Editor
Advertisement

ஸ்பெயின் நாட்டிலும், முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி, ஐரோப்பிய நாடுகளில் முதலீடுகளை பெருமளவில் ஈர்க்க  இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement

தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறைப் பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டிற்கு சென்றார். இதற்கு முன்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (27.1.2024) சென்னை விமான நிலையத்தில்,செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:

நமது திராவிட மாடல் அரசின் 1 டிரில்லியன் பொருளாதார இலக்கை எட்டிவிடும் முயற்சிகளில், 2024-ஆம் ஆண்டு தொடக்கமே உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றியாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து இன்று பயண நாட்கள் தவிர்த்து 8 நாட்கள் பயணமாக ஸ்பெயின் செல்கிறேன். பிப்ரவரி 7-ஆம் தேதி காலை சென்னை திரும்புகிறேன்.
என்னுடைய கடந்தகால வெளிநாட்டுப் பயணங்களைப் பொறுத்தவரை, கடந்த 2022-ஆம் ஆண்டு, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ஐக்கிய அரபு நாடுகள் சென்றிருந்தேன். அந்தப் பயணத்தில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் 6 ஆயிரத்து 100 கோடி ரூபாய் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

அதேபோல, 2023-ஆம் ஆண்டு மே மாதம் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சென்றதில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ஆயிரத்து 342 கோடி ரூபாய் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இந்த இரண்டு பயணங்கள் மூலமாக, 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் 7 ஆயிரத்து 442 கோடி ரூபாய்க்கான முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு வேகமாக செயல்வடிவம் கொடுத்ததால் பல நிறுவனங்கள், தங்களின் தொழிற்சாலைகளை தமிழ்நாட்டில் நிறுவத் தொடங்கியிருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, ஜப்பான் நாட்டை சேர்ந்த ஓம்ரான் மற்றும் மிட்சுபிஷி போன்ற நிறுவனங்கள். தங்களின் தொழிற்சாலைகளை நிறுவ தொடங்கிவிட்டார்கள்.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட இரண்டே மாதங்களில், ஓம்ரான் நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோன்று, சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த கேப்பிடாலேண்டு நிறுவனத்தின் ஐ.டி. பூங்கா-வை சமீபத்தில் தொடங்கி வைத்தேன். ஐக்கிய அரபு நாடுகளில் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், லூலூ பன்னாட்டுக் குழுமம், கோயம்புத்தூரில் தன்னுடைய திட்டத்தை துவங்கியிருக்கிறது.

ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளைப் போன்றே, ஸ்பெயின் நாட்டிலும், முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த இருக்கிறேன். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த முன்னணி முதலீட்டாளர்கள், வணிக அமைப்புகள், தொழில் முனைவோர் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த மாநாட்டில், தமிழ்நாட்டில் நிலவும் சாதகமான முதலீட்டுச் சூழல் பற்றியும், தமிழ்நாட்டின் கட்டமைப்பு வசதிகள், மனிதவள ஆற்றல் போன்றவற்றின் சிறப்பம்சங்களையும் எடுத்துக்கூறி, இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ள தமிழ்நாடுதான் உகந்த மாநிலம் என்று, அந்த நாட்டு முதலீட்டாளர்களுக்கு எடுத்துரைக்க இருக்கிறேன்.

இந்த பயணத்தின்போது, ரோகா (ROCA) மற்றும் கெஸ்டாம்ப், உட்பட சில பெரும் தொழில் நிறுவனங்களுடனும், Invest Spain எனும் முதலீட்டு அமைப்புடனும் நேரடி பேச்சு வார்த்தைகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்த பயணத்தின் மூலமாக, ஐரோப்பிய நாடுகளின் கவனத்தையும் ஈர்த்து, அந்த நாடுகளில் இருந்தும் முதலீடுகளை பெருமளவில் ஈர்க்க முடியும் என்று நம்புகிறேன். எனவே, உங்க அனைவரின் வாழ்த்துக்களோடு இந்த பயணம் வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். இதனை அடுத்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

செய்தியாளர் கேள்வி - உங்கள் வெளிநாட்டு பயணம் வெற்றி பெற வாழ்த்துகள். பெரிய
நிறுவனம் ஏதாவது வர வாய்ப்பு இருக்கிறதா. எவ்வளவு முதலீடுகள் எதிர்பார்க்கப்படுகிறது?

முதலமைச்சர் பதில் - நான் பயணம் முடித்துவிட்டு வந்த பிறகு விளக்கமாக சொல்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.

Tags :
Invest In TNMK Stalinnews7 tamilNews7 Tamil UpdatesSpainTamilNaduThrive In TN
Advertisement
Next Article