“தமிழ்நாட்டில் மேலும் முதலீடுகள் செய்யுங்கள்!” டாடா நிறுவன தலைவர் சந்திரசேகரனிடம் கேட்டுக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் பகுதியில் அமையவுள்ள, டாடா நிறுவனத்தின் புதிய கார் உற்பத்தி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மேலும் முதலீடுகள் செய்ய பரிசீலிக்குமாறு டாடா நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகரனிடம் கேட்டுக்கொண்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் (X) தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரனுடன் அந்நிறுவனத்திற்கான உற்பத்தி அலகிற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கும் சிறப்பான வாய்ப்பு கிடைத்தது.
எளிமையாக தொடங்கி கார்ப்பரேட் இந்தியாவில் மிகவும் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக உயர்ந்து, பலருக்கு உத்வேகமாக பணியாற்றியுள்ளார். அவரது தலைமையின் கீழ், டாடா குழுமம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும் மாற்றத்தையும் கண்டுள்ளது.
நாங்கள் ஆக்கப்பூர்வமான விவாதங்களில் ஈடுபட்டோம், அப்போது தமிழகத்தில் மேலும் முதலீடுகள் செய்ய பரிசீலிக்குமாறு அவரை அன்புடன் கேட்டுக் கொண்டேன்.
கடந்த மூன்று வருடங்களாக தமிழ்நாட்டில் டாடா குழுமத்தின் விரிவாக்க பணிகளை முன்னிலைப்படுத்தியதற்காகவும், தமிழ்நாடு அரசாங்கத்தின் வேகம், அணுகல் மற்றும் சுறுசுறுப்பான ஒத்துழைப்பு ஆகியவற்றை அங்கீகரித்ததற்காகவும் சந்திரசேகரனை நான் மிகவும் பாராட்டுகிறேன். டாடா குழும நிறுவனங்களின் அனைத்துத் தேவைகளுக்கும் நாங்கள் தொடர்ந்து முழுமையாகப் ஒத்துழைப்போம், நமது இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான வளர்ச்சியை சாத்தியமான எல்லா வழிகளிலும் வலுவூட்டுவதற்கு நெருக்கமாக பணியாற்றுவோம் என்று நான் அவருக்கு உறுதியளித்தேன்.
இந்தத் திட்டம் வெற்றியடைய எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் அவர் தொடர்ந்து உறுதுணையாக இருப்பதற்கு மனமார்ந்த நன்றிகள்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.