தீவிரமடைந்த போர்... ரஷ்யாவின் மற்றொரு பகுதியிலும் அவசரநிலை பிரகடனம்!
ரஷ்யாவின் கூா்ஸ்க் பிராந்தியத்துக்குள் உக்ரைன் ராணுவம் தொடர்ந்து முன்னேறிவரும் நிலையில், அண்டை பிராந்தியமான பெல்கொரோடிலும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் சுமார் 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா தனது தாக்குதல்களை நடத்தியது. ரஷ்யாவின் தொடர் தாக்குதல்களால் உக்ரைனில் உயிர் மற்றும் உடைமை இழப்புகள் தொடர்ந்து அதிகரித்தன. ஆரம்பத்தில் ரஷ்ய அதிபர் புதினின் படைகள் ஆக்ரோஷமாக இருந்தன. பின்னர் ஜெலன்ஸ்கியின் ராணுவமும் மேற்கத்திய ஆயுதங்களின் உதவியுடன் எதிர் தாக்குதல்களை நடத்தி ரஷ்யாவை அதிர வைத்தது.
இந்த சூழலில் கடந்த 6ம் தேதி ரஷ்யாவின் எல்லைப் பிராந்தியமான கூர்ஸுக்குள் பீரங்கிகள் மற்றும் கவச வாகனங்களுடன் சுமார் 1,000 உக்ரைன் படையினர் சமீபத்தில் நுழைந்தனர். உக்ரைன் படையினர் அங்கு ஒரு வாரமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் இருந்த மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அந்த பிராந்தியத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் தாக்குதலில் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், பொதுமக்கள் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிகிறது.