“பரந்தூர் விமான நிலையம் அவசியமானது... மக்களை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம்” - அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் ஏகனாபுரம் கிராம மக்களை அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தவெக தலைவர் விஜய் நாளை (ஜன.20) சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பு குறித்து தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விருதுநகரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “டெல்லி உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களுடன் ஒப்பிடும் போது சென்னை விமான நிலையம் 1300 ஏக்கர் கொண்ட மிகவும் சிறியதாக உள்ளதால் பரந்தூர் விமான நிலையம் அவசியமானதாக உள்ளது. பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக மக்களை யார் வேண்டுமானாலும் எந்த கட்சி தலைவரும் சந்திக்கலாம். விஜய் மக்களை சந்திக்கும் போது அவர்களிடம் குறைகளை கேட்டு குறைகளை அரசிடம் தெரிவித்தால் அதனை சரி செய்வது குறித்து அரசு ஆராயும்” என்றார்.
தொடர்ந்து அவரிடம் அரசின் நிதி நிலைமை குறித்த எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு வைத்தது பற்றி கேள்வி எழுப்பபட்டது, அதற்கு பதிலளித்த தங்கம் தென்னரசு , “அவர் ஒரு பரபரப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாட்டில் நிதி நிலைமை உள்ளது என அடிப்படை குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அவர் கூறியது வேடிக்கையாக உள்ளது. இது குறித்து சட்டமன்றத்தில் நான் விரிவான விளக்கம் அளித்துள்ளேன். இருந்தாலும் மீண்டும் மக்கள் மன்றத்தில் அவரை தவறான குற்றச்சாட்டை முன்வைக்கிறார்.
ஒட்டு மொத்தமாக மாநிலத்தின் வளர்ச்சி உயரும் போது திருப்பி செலுத்தும் திறன் உயரும். நிதிக்குழுதான் எவ்வளவு கடன் வாங்க வேண்டும் என்பதை நிர்ணயம் செய்கிறது. தமிழ்நாட்டின் நிதி நிலைமை கட்டுக்குள் உள்ளது. 2021ம் ஆண்டில் 1 லட்சத்து 2000 கோடியாக இருந்த பட்ஜெட் அளவு தற்போது 4 லட்சத்து 12 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு நிதி ஆண்டும் நிதி குழு நிர்ணயம் செய்துள்ள அளவைவிட குறைவாகவே கடன் பெற்றுள்ளோம். நிதி நிலைமையை கட்டுக்குள் வைக்க தேவையான நுட்பமான பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாடு அரசுக்கு தேவையான நிதி வழங்க வேண்டும். வளர்ந்த மாநிலமான தமிழ்நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப நிதி ஒதுக்கிடு செய்ய வேண்டும். மத்திய அரசின் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசே கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.
பல்வேறு திட்டங்களுக்கு மாநில அரசு தனது சொந்த நிதியை பயன்படுத்தி வருகிறது. மத்திய அரசு தமிழ்நாடு அரசுக்கு முறையாக நிதி ஒதுக்கீடு செய்யாததால் கடன் சுமை அதிகரிக்கிறது. தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் 15 சதவீதம் மட்டுமே நிதி பங்கீடு வழங்கியுள்ளது” என்றார்.